சமீபத்தில் சர்ச்சை பேச்சு ஒன்றில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றும் தகுதியையும் இழந்தார். அதோடு, அவருக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இல்லமும் திரும்பப் பெறப்பட்டது. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முறைப்படி முடிவுக்கு வந்தாலோ அல்லது எதிர்பாராதவிதமாக அவர்கள் இடையில் தங்களது பதவியை இழந்தாலோ அவர்கள் பதவி வகித்த காலத்தைக் கணக்கிட்டு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது நாடாளுமன்றத்தின் வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவியை இழந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட இருக்கும் ஓய்வூதியம் குறித்த ஆவணங்கள் சபாநாயகர் ஓம் பிர்லா முன்பு தாக்கல் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, கடந்த இருபது ஆண்டுகளாக ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்திருக்கிறார். அந்தக் காலத்தைக் கணக்கிட்டு அவருக்கு மாதம் 55 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் அளித்து இருக்கிறார். எனவே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வங்கிக் கணக்கில் அவருக்கு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட இருக்கும் ஓய்வூதியத் தொகை செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.