மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க ஆணையிட்டு இருக்கிறார். இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முமுநேரமும் மக்கள் பணியில் ஈடுபட்டிருப்பதால் தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 13.4.2022 அன்று தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழக முதல்வர், மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவா, துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணியினை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்து இருக்கிறார். அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் 30,000 ரூபாயும், துணை மேயர்களுக்கு 15,000 ரூபாயும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 10,000 ரூபாயும் மதிப்பூதியமாக வழங்கப்படும்.
அதைப்போன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு 15,000 ரூபாயும், துணைத் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு 5,000 ரூபாயும் மதிப்பூதியமாக வழங்கப்படும். மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு 5,000 ரூபாயும், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2,500 ரூபாயும் மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் இம்மாதம், அதாவது 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்” என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.