8 மணி நேர வேலை திட்டத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8 மணி நேர வேலை திட்டத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தொழிலாளர்கள் தினமும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டுமென்ற உரிமை, அவ்வளவு எளிதில் கிடைத்திடவில்லை. பல நாடுகளிலும், பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் விளைவாகவே, தொழிலாளர் களுக்கு இந்த உரிமை கிடைத்தது எனலாம். அதன் சுருக்கமான வரலாறு என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

நீங்கள் நினைப்பது போல் தொழிலாளர்களுக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலை என்பது உலகம முழுவதும் ஒரே நேரத்தில் அமல்படுத்தவில்லை. ஒவ்வொரு நாட்டின் அழுத்தம், சூழல், தொழில்துறை ஆகியவற்றின் அடிப்படையில் இவை அமல்படுத்தப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் எட்டு மணி நேர வேலையை அறிமுகப் படுத்தியது ஸ்பெயின் நாடுதான். ஸ்பெயினின் மன்னராக இரண்டாம் பிலிப்ஸ் இருந்த காலத்தில், 1594 ஆம் ஆண்டு அரச சாசனம் ஒன்றின் மூலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதில் தொழிலாளர்கள், காலை 4 மணி நேரம், மாலை 4 மணி  நேரம் என பிரித்துப் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த சமயத்தில் உலகில் பல பகுதிகளிலும் 14 மணி நேர வேலை என்பது சாதாரணமாகவே இருந்து வந்தது. பிரிட்டனில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு, வேலை நேரம் மீதான அழுத்தம் மேலும் அதிகமானது. அந்த தருணத்தில் ஜவுளி தொழிற்சாலையின் முதலாளியான 'ராபர்ட் அவன்' என்ற சோசியலிசவாதி, தொழிலாளர்களின் நலன் குறித்து பேச ஆரம்பித்தார். தொழிற்சாலைகளில் சூழலை மேம்படுத்துவது, குழந்தை வளர்ப்பை கூட்டாக செய்வது போன்றவற்றிற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

ராபர்ட் அவன் முதன்முறையாக 1810ல் தான் 8 மணி நேரம் வேலை என்ற கருத்தை முன்வைத்தார். அதன் பிறகு 1817ல் எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுதுபோக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு என்ற புகழ்பெற்ற கருத்தை முன் வைத்தார். அச்சமயத்தில், தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விவகாரம் தொடர்ந்து பொது விவாதமாக இருந்து நிலையில், 1847ல் பிரிட்டனில் 10 மணி நேர வேலை அமல்படுத்தப்பட்டது. 1848 ஆம் ஆண்டு தொழில்துறை புரட்சிக்குப் பிறகு, பிரான்சில் 12 மணி நேர வேலை அமலுக்கு வந்தது. 1850களில் நியூசிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்த தொழிலாளர் இயக்கங்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த ஆரம்பித்தனர். சில இடங்களில் அதற்கான ஒப்புதலும் கிடைத்தது 

பின்னர் 1866ல் ஜெனிவாவில் கூடிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு, 8 மணி நேர வேலையை கோரிக்கையாக வைத்தனர். இதற்கிடையில் 1889 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, பாரிஸில் சோசியலிச தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. இதில் மொத்தம் 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில்தான் முதன்முறையாக 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த ஆண்டே 1890 மே ஒன்றாம் தேதி, உலகம் முழுவதும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டுமென அறிவிக்கப் பட்டது. 

இதன் பிறகுதான், மே ஒன்றாம் தேதி, உலகமெங்கும் மே தினமாக படிப்படியாகப் பிரபலமானது. எட்டு மணி நேர வேலையானது ஒரு அரச சாசனத்தின் கருத்தாக்கமாக இருந்தாலும், 1919ல் இதற்காவே தனி சட்டத்தை இயற்றியது ஸ்பெயின் நாடு. எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு 8 மணி நேர பணி என்பது நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அந்த சமயத்தில்தான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் விவாதிக்கப்பட்ட முதல் விஷயமே எட்டு மணி நேர வேலை குறித்துதான். 1919 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் என்பதை சர்வதேச தொழிலாளர் அமைப்பு தீர்மானமாக நிறைவேற்றியதும், ஒவ்வொரு நாடுகளாக இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கினர். 

ஜெனிவாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1921லேயே இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது என்றாலும், உடனடியாக இது அமலுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவின் வேலை நேரம், 12 முதல் 14 மணி நேரமாக இருந்தது. 1937ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் தொழிலாளர் துறை உருவாக்கப்பட்டது. 1942ல் பி.ஆர் அம்பேத்கர், இந்திய வைஸ்ராயின் எக்ஸிகியூடிவ் கவுன்சிலில் தொழிலாளர் துறைக்கு பொறுப்பேற்றார். 1942ல் நவம்பர் 27 ஆம் தேதி, இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஏழாவது அமர்வு புதுடெல்லியில் கூடியபோது, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்பதை அம்பேத்கர் அங்கே முன்மொழிந்தார். 

தொழிலாளர் நலனைப் பொறுத்தவரையில் மட்டுமல்லாமல், பெண் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கும்படியான பல சீர்திருத்தங்களையும் பி.ஆர் அம்பேத்கரே முன்வைத்தார்.  என்னதான் 1942லேயே 8 மணி நேர வேலையை வலியுறுத்தினாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 'தி இண்டஸ்ட்ரீஸ் ஆக்ட்' மூலமாகவே இது முழு சத்தமாக இயற்றப்பட்டது. 

இறுதியாக 1990ம் ஆண்டு முதல் மே தினம் மெல்ல மெல்ல உலகமெங்கும் பரவி, இந்தியாவில், சென்னை மெரினா கடற்கரையில் முதன்முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com