
செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது நிலா இரத்த நிலவு போல் காட்சியளித்தது. இதனை தொடர்ந்து இந்த மாதமே மற்றொரு கிரகணம் நிகழவுள்ளது. அது எப்போது? இந்தியாவில் தெரியுமா? என்ற முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய ஒளியை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ மறைக்கும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் வானத்தில் சூரியனின் பிறை வடிவ நிழல் தோன்றும். சந்திர கிரகணங்களைப் போலல்லாமல், சூரிய கிரகணங்கள் பூமியில் குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டுமே தெரியும்.
2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதமே ஒரு வான திருவிழா மாதமாகவே உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி பௌர்ணமியில் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. தற்போது வரும் அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தன்று வானில் நிலவு வித்தியாசமாக தோற்றமளித்தது போன்றே, சூரிய கிரகணத்தன்று சூரியன் வழக்கத்தை விட வித்தியாசமாக தோற்றமளிக்கும்.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் என விஞ்ஞானிகள் அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே 3 கிரகணங்கள் நிகழ்ந்து முடிந்தது. இந்த நிலையில் கடைசி சூரிய கிரகணம் தான் தற்பொது நிகழவுள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளில், அதாவது செப்டம்பர் 21, 2025, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்த நாள் சர்வ பித்ரு அமாவாசையும் நிகழும். இத்துடன், மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்கும்.
நேரம்:
இந்திய நேரப்படி, செப்டம்பர் 21 ஆம் தேதி சூரிய கிரகணம் இரவு சுமார் 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும்.
இது இரவில் ஏற்படுவதால், இந்தியாவில் இது தெரியாது என்று சொல்லப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா, நோர்போக் தீவு, தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் தெரியும்.