
பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வந்து , சூரிய ஒளியினை பூமியில் பட விடாமல் சந்திரன் மறைப்பதே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி சுழலும் பொது பூமியின் நிழல் சந்திரன் மீது பட்டு அதன் ஒளியினை தடுக்கும் , இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ஏற்கனவே ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மற்றொரு சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி (2025) அன்று நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 'ரத்த நிலவு' blood moon என்றும் அழைக்கப்படுகிறது. சென்னை போன்ற இந்திய நகரங்களில் இந்த வானியல் நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று வானியல் அறிவியலாளார்கள் தெரிவித்துள்ளனர்.
முழு நிலவான பெளர்ணமி நாளில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நிற்கும்போது இந்தச் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. வருகிற செப்டம்பர் 7ம் தேதி நிகழவிருக்கும் இந்த Blood Moon காட்சியை ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதியைச் சேர்ந்த மக்கள் தெளிவாகக் காணலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த கிரகணம் சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும், இது சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாகும். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் இதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகணங்களைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இதை எந்த வித கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே போதும் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம்.
மேலும், அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும். ஏனென்றால் சந்திர கிரகணம் நிகழ்ந்து முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் உதிக்கும்.