மும்பை மாநகரம், வெளிநாட்டினருக்கு அதிக செலவு வைக்கும் நகரமாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மும்பைதான் இந்தியாவிலேயே காஸ்ட்லியான நகரம். மெர்சர் நிறுவனம் மேற்கொண்டுள்ள காஸ்ட் ஆப் லிவிங் சர்வேயில் இந்திய நகரங்களின் காஸ்ட் ஆப் லிவிங் தெரிய வந்திருக்கிறது.
மெர்சர் நிறுவனம் உலகெங்கும் உள்ள 227 நகரங்களை ஆய்வு செய்து, காஸ்ட்லியான நகரங்களை வரிசைப்படுத்தியிருக்கிறது. அதில் மும்பைக்கு 147வது இடம் கிடைத்திருக்கிறது. உலகளவில் ஹாங்காக் காஸ்ட்லியான நகரமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மும்பை தொடர்ந்து காஸ்ட்லியான நகரமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி 169வது இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் சென்னையும், பின்னர் பெங்களூரும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொல்கத்தாவும் புனேவும் கடைசி இடத்தில் இருக்கின்றன. இங்கெல்லாம் காஸ்ட் ஆப் லிவிங் குறைவு என்கிறது ஆய்வறிக்கை,
உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டட 200 காரணிகளை முன்வைத்து நகரங்களை வகைப்படுத்தி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நகரத்தின் நிலவமைப்பு, ரியல் எஸ்டேட் வளர்ச்சி, போக்குவரத்து வசதி, உணவு, உடை, அத்தியாவசியப்பொருட்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வரிசைப்படுத்தி அதன் படி பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்கள் உலக அளவில் காஸ்ட்லியான நகரமாக தொடர்கின்றன. பாகிஸ்தானைப் பொறுத்தவரை கராச்சியும் இஸ்லாமாபாத்தும் காஸ்ட்லியான நகரங்கள் என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே போன்ற இடங்களில் முமபையை விட பாதி விலைக்கும் தங்குமிடங்கள் கிடைப்பது தெரிகிறது.
உதாரணத்திற்கு மும்பையில் ஓரிரவு தங்குவதற்கு சராசரியாக 4000 ரூபாய் செலவு செய்தாக வேண்டும். இதே சென்னை, ஹைதராபாத் நகரங்களாக இருந்தால் சராசரியாக 2000 ரூபாய் செலவு செய்தால் போதுமானது. கொல்கத்தா, இந்தியாவின் மாநகரங்களில் குறைவான கட்டணம் விதிக்கும் இடமாக தொடர்கிறது.
227 நகரங்களில் சில நகரங்கள் பட்டியலில் முன்னணியில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு சில நகரங்கள் திடீரென்று முன்னுக்கு வந்துள்ளன. மாறி வரும் பொருளாதார சூழலும், கொரானாவுக்கு பிந்தைய காலத்தில் வெளிநாட்டினரின் வருகை கூடி ஆரம்பித்திருப்பதும் முக்கியமான காரணங்களாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
பன்னாட்டு நிறுவனங்களை பொறுத்தவரை ஆசியாவில் தங்களுடைய கிளைகளை தொடங்க வேண்டுமென்றால் மும்பையிலோ அல்லது டெல்லியிலோ ஆரம்பிப்பதுதான் செலவு குறைவான விஷயமாக இருக்கும் என்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மும்பை காஸ்ட்லி நகரமாக இருந்தாலும் வெளிநாட்டினரை பொறுத்தவரை ஆசியாவிலேயே மும்பையும், டெல்லியும் செலவு அதிகம் வைக்காத சிக்கனமான நகரம் என்கிறது ஆய்வறிக்கை.