பல் உடைக்கும் பல்வீர் சிங் யார் தெரியுமா?

பல் உடைக்கும் பல்வீர் சிங் யார் தெரியுமா?

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வருபவர்களின் பற்களைப் பிடுங்கியதாகக் கூறப்படும் பல்வீர் சிங், ராஜஸ்தான் மாநிலம், டோங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மும்பை ஐ.ஐ.டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, இந்திய எண்ணெய் கழகத்தில் (ஐ.ஓ.சி) பணியில் அமர்ந்தார். சில ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அவருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று ஆவை ஏற்பட்ட, அதற்காகத் தீவிரமாகப் படித்திருக்கிறார்.

மத்திய அரசுப் பணியில் இருந்த அவரது தந்தையும், பல்வீர் சிங் படிப்புக்குத் தேவையான வசதிகளை உருவாக்கித் தந்திருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய பல்வீர் சிங், அந்தத் தேர்வில் வெற்றி பெற்றார். 2020 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், தனது பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழகத்தின் அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனில் நான்கு மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்து இருக்கிறார்

பல்வீர் சிங் குறித்து அவருக்குக் கீழ் பணிபுரியும் காவலர்களிடம் விசாரித்தபோது, ‘பார்க்க சாதுவாகத் தெரியும் இவர் மிகவும் கோபக்காரர். கோபம் வந்துவிட்டால் அனைவரிடமும் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். அவருக்குத் தமிழ் தெரியாது என்பதால் யார் சொல்வதையும் புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார். அதனால் பலரும் அவரைச் சந்திப்பதையே விரும்ப மாட்டார்கள். அவரது நடவடிக்கை குறித்துக் கேள்விப்பட்ட நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன் சில வாரங்களுக்கு முன்பு அவரைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும், பல்வீர் சிங் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

குற்ற வழக்கில் ஈடுபட்டு வருபவர்கள் அல்லது விசாரணைக்கு என அழைத்து வரப்பட்டவர்களிடம் அவரே நேரில் விசாரணை நடத்துவார். அப்போது இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேசுவார். அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாமல் எதிரில் இருக்கும் கிராமத்து மக்கள் பயத்தில் எதையாவது கொஞ்சம் சத்தமாகச் சொன்னாலும் கூட அதிகமாகக் கோபம் கொள்வது அவரது வழக்கம். இந்த நிலையில்தான், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களின் பற்களைப் பிடுங்கியதாக அவர் மீது புகார் எழுந்து உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் அவர் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’ என்று கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com