
ஒரு வழக்கமான லூயிஸ் உய்ட்டன் கைப்பையின் விலையே மிக அதிகம். ஆனால், அதைக் கூட சில வருடங்கள் உபயோகித்து விட்டு மீண்டும் நண்பர்கள் யாருக்கேனும் மறுபயன்பாட்டுக்கு விற்க முடியும் எனில் அது உங்களுக்கு சில ஆயிரம் டாலர்களைத் திருப்பித் தரலாம், குறைந்தபட்சம் யாருக்கேனும் அன்பளிப்பாகவேனும் அதை நம்மால் தர இயலும்.
ஆனால் இந்த லூயிஸ் உய்ட்டனின் புத்தம்புது அறிமுகமான இந்த மைக்ரோஸ்கோபிக் கைப்பையைப் பாருங்களேன், இதை ரீசேலில் விற்க முடியாது, ஆனாலும் அதற்காக இதன் விலை ஒன்றும் குறைவில்லை. வழக்கமான லூயிஸ் உய்ட்டன் கைப்பைகளைக் காட்டிலும் இது அதிகமாகவே விலை போயிருக்கிறது. புரூக்ளின் சேர்ந்த கலைக் குழுவான MSCHF இன் தயாரிப்பான இந்த நியான் கைப்பை $63,750க்கு ஏலத்தில் விற்கப்பட்டதாகத் தகவல். ஆனால் இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த கைப்பையை நீங்கள் உபயோகிக்க முடியாது என்பதோடு அது தினம் தினம் கையில் வைத்து அழகு பார்க்கும் வாய்ப்பைக் கூட தராத அளவுக்கு அளவிலும் மிகமிகச் சிறியது என்கிறார்கள்.
மிகச்சிறியது என்றால் மினி மணிபர்ஸ் அளவுக்கு கூட அல்ல, இந்தக் கைப்பையை நீங்கள் கண்களால் காண வேண்டுமென்றால் கூட உங்களது வெறும் கண்களுக்கு அது தட்டுப்படாது. அதைக் கண்ணால் காண உங்களிடம் மைக்ரோஸ்கோப் இருந்தாக வேண்டும். அந்த அளவுக்கு அது அளவில் மீச்சிறியது. எந்த அளவுக்கு என்றால் ஒரு உப்புக்கல்லை எடுத்து அதை துகள்களாக உடைத்தால் கிடைக்குமே தூள் உப்பு. ஆம், அந்த தூள் உப்பின் ஒரு மீச்சிறு துகளுக்கு இணையான அளவு கொண்டதாம் இந்த கைப்பை. இது உண்மையான கைப்பையே அல்ல என்று கூடக் கருதலாம். காரணம் இதனால் ஒரு உபயோகமும் இருக்கப் போவதில்லை என்பதே நிஜம்.
மைக்ரோஸ்கோப்பில் பார்க்கையில் நியான் மஞ்சள்+பச்சை நிற காம்பினேஷனில் இருக்கும் இந்தக் கைப்பை, $63,750க்கு விற்கப்பட்டதாகத் தகவல், இது $15,000 என்ற தொடக்க ஏலத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இந்தக் கைப்பையானது "கடல் உப்பின் ஒரு துகளை விட சிறியது மற்றும் ஊசித் துவாரத்தின் வழியாக நுழையும் அளவுக்கு குறுகியது" என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் இடுகையில் தெரிவித்துள்ளது.
புரூக்ளினை தளமாகக் கொண்ட MSCHF நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் இடுகையில் நீங்கள் அதைக் காண முடியும்.MSCHF இன் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி கெவின் வைஸ்னர், தி நியூயார்க் டைம்ஸிடம், இந்த வடிவமைப்பைப் பயன்படுத்த லூயிஸ் உய்ட்டனிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று கூறினார். லூயிஸ் உய்ட்டனுக்கு சொந்தமான LVMH, கருத்துக்கான ஊடகங்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
அதன் ஏலப்பட்டியலின் படி, "சிறிய இயந்திர உயிரியல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை உருவாக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஸ்டீரியோலித்தோகிராஃபிக் செயல்முறையைப்" பயன்படுத்தி இந்தப் பை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதும், மேலும் பார்ப்பதற்கு பையின் உள்நோக்கிய டிஜிட்டல் காட்சியைக் கொண்ட நுண்ணோக்கியுடன் வருகிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த மைக்ரோஸ்கோபிக் கைப்பை குறித்த அதிகாரப்பூர்வமான மேலதிகத் தகவல்களை லூயிஸ் உய்ட்டனுக்கு சொந்தமான LVMH தான் தெரிவிக்க வேண்டும்.