சொகுசு படகில் பயணிக்க ஆசையா?

சொகுசு படகில் பயணிக்க ஆசையா?

லகிலேயே மிக நீளமான ஆற்றுப் பயண அனுபவத்தைக் கொடுக்கும், ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு படகு சேவையை காணொளி வயிலாக இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நாட்டின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நதி வழியாகவே பயணிக்கும் வகையில், இந்த சொகுசு படகின் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

வாரணாசியிலிருந்து சுமார் 51 நாட்களுக்கு 3,200 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதிக்குச் செல்லும் இந்த சொகுசு படகில் பயணிக்க நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை செலவாகுமாம். அந்த வகையில் 51 நாட்கள் பயணிக்க நபர் ஒருவருக்கு இருபது லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தும்படி இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த சொகுசு படகு நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களைத் தொட்டுச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சொர்க்க லோகம் போல் காட்சியளிகும் இந்த சொகுசு படகு 18 அறைகளோடு, 36 விருந்தினர்கள் பயணிக்கும் வகையில் சலூன், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பல அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த சொகுசு படகில் பணியாற்றுவார்கள். ‘சுமார் 27 நதிகள் மற்றும் இரண்டு நாடுகளைக் கடந்து தனது பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் இந்த படகுப் பயணத்தின் மூலம், நாட்டின் பல்வேறு கலாசாரத்தையும் அதன் அழகியலையும் மக்களையும் கண்டறியலாம்’ என பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சொகுசு படகு திட்டத்தினால், ஆற்றங்கரையோர நகரங்களில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் பலவும் ஏற்படுத்தப்பட்டு, நகர்ப்புறங்கள் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த சொகுசு படகு சேவை இயக்கப்படும். மழைக் காலங்களில் கங்கை ஆற்றில் நீர் பெருக்கு அதிகமிருக்கும் என்பதால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு இந்த சொகுசு படகுப் போக்குவரத்து பயணம் நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com