

இணையத்தின் ஆக்கிரமிப்பு அதிகமாக அதிகமாக மக்கள் அதில் மூழ்கி பல விபரீத செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மதுரையில் ஒரு கல்லூரி மாணவி, யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது விபரீதத்தில் முடிந்துள்ளது.
மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) - விஜயலெட்சுமி தம்பதியினர் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் தான் கலையரசி, தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். சிறிதளவு உடல்பருமனாக இருந்ததால், உடல் எடையை குறைக்கும் முயற்சியை எடுக்க விரும்பியுள்ளார்.
இதனிடையே கடந்த வாரம், 'இணைவோம் இயற்கையுடன்' என்ற YOUTUBE பக்கத்தில், 'உடல் எடை குறையாதவர்களுக்கு Fat கரைய வைத்து உடலை மெலிதாக்கும் வெங்காரம்' என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த வீடியோ பதிவை பார்த்துள்ளார் கலையரசி. இதையடுத்து யூடியூப்பில் கூறியது போலவே, வெங்காரத்தை வாங்கி வந்து சனிக்கிழமை அன்று சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரு உயிரை பறிக்குமா வெங்காரம்.. வெங்காரம் என்றால் என்ன? ஏன் அதை கடைகளில் விற்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க..
வெங்காரம், ஆங்கிலத்தில் போராக்ஸ் எனப்படுகிறது. இது சோடியம் டெட்ராபோரேட் / பைகார்பனேட் ஆகிய ரசாயனங்களை குறிக்கும். இது உணவோ அல்லது மருந்தோ கிடையாது. நாம் வீட்டை சுத்தப்படுத்தும் திரவத்தில் இருக்கும் ஒரு ரசாயனம் இது. பூச்சிக்கொல்லி மருந்துகளில்கூட இது இருக்கும். இது முழுவதுமாக விஷம் இல்லை என்றாலும், அதில் விஷத்தன்மை உள்ளதால் நிச்சயம் உடல் உறுப்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. பலரும் தற்போது வீடுகளிலேயே ரசாயனங்களை தயாரிப்பார்கள் அதனாலேயே இது கடைகளில் ஒரு பொருளாக விற்கப்படுகிறது. பார்ப்பதற்கு கற்பூரம் போல் இருந்தாலும், சுவை என்னவோ சோடா உப்பு போன்று தான் இருக்குமாம்.
Disclaimer | எடை குறைப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கான முயற்சிகளில் தாமாகவே இறங்குவது பேராபத்தில் முடியும். எனவே எதை செய்தாலும் மருத்துவர் அறிவுரையுடன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.