மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகின்றது. இதுவரை மிடில் கிளாஸ் மக்களுக்கு நிறைய கசப்பு மருந்துகளும் சிறிய அளவிலான இனிப்பு மருந்துகள் மட்டுமே கிடைத்து வந்திருக்கின்றன. டீமானிடைசேஷன் தொடங்கி, நிறைய விஷயங்களில் சாமானியர்கள் சிரமப்பட்டிருக்கிறார்கள். அடுத்து வரும் ஒன்றரை ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வரப்போகும் பட்ஜெட் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. வழக்கம்போல் வருமான வரிதான் மிடில் கிளாஸ் மக்களின் பெரும் கவலை. இயல்பாகவே நிறைய சேமிக்கும் இயல்பு கொண்ட இந்திய மிடில் கிளாஸ் மக்கள் அதை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
வருமானவரி வரம்பு மேலும் தளர்த்தப்படுமா என்பதுதான் மிடில் கிளாஸ் மக்களின் கேள்வி. இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்த தேவையில்லை. வருமான வரி தாக்கல் செய்யவும் தேவையில்லை என்கிற நிலை இருக்கிறது. இரண்டைரை லட்சம் என்பதை நான்கு லட்சமாக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஸ்டாண்ட்ர் டிடெக்ஷன் தற்போது 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பிருக்கிறது. இது குறித்து முந்தைய பட்ஜெட் அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
80 சி வரம்பில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பும் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் 80 சி பிரிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையெல்லாம் இருமடங்கு ஏறியிருக்கின்றன. பி.எப் பங்களிப்பும் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது
இந்நிலையில் ஒன்றரை லட்சம் மட்டுமே 80 சி தொகுப்பில் விலக்கு கொடுப்பது சரியாக இருக்காது. குறைந்தபட்சம் இரண்டரை லட்சமாக உயர்த்துவது சரியாக இருக்கும். அதே போல் மருத்துவமனை செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும் 50 ஆயிரம் ரூபாயை உயர்த்துவது சரியாக இருக்கும்.
சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் 6.5 சதவீதம் இருந்த வீட்டுக்கடன் வட்டி வகிதம், ஆண்டின் முடிவில் 9 சதவீதமானது. அதுவே ஒரு பெரும் பின்னடைவை தந்திருக்கிறது. வரும் பட்ஜெட்டில் வீட்டுக்கடன் வரம்பு, 3 லட்சம் வரை உயரக்கூடும். முதல் முறையாக வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு சில சலுகைகள் இருக்கக்கூடும். புதிய ஐபிசி விதிமுறைகளின் படி, வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டுபவர்களுக்கு வட்டி வீதம் குறைவு உள்ளிட்ட சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
அதிக வட்டி, டிமாண்ட் குறைவு என்பதால் புதிதாக வீடு வாங்குபவர்கள் குறைந்திருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கூட படிப்படியாக குறைக்கப்பட்டுவிட்டன. ரியல் எஸ்டேட் துறையில் நிச்சயமாக ஒரு தேக்க நிலை நீடிக்கிறது. பட்ஜெட்டில் ஏதாவது ஆறுதல் செய்திகள் வெளிவருமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.