சென்னை, பெங்களூரு, டெல்லி என பெரு நகரங்களில் தொடங்கி கிராமங்கள் வரை தெரு நாய்களால் பொது மக்கள் துரத்தப்படுவதும், கடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. தொடர் தெருநாய் பிரச்சினையின் மீது உச்சநீதிமன்றம் கூட தன் கவனத்தை திருப்பி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இதைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
இச்சூழலில் பெங்களூருவில் வசித்து வரும் வெளிநாட்டை சேர்ந்த ஆலிவர் ஜோன்ஸ் என்பவர் சமீபத்தில் தெருநாய் கடிக்கு ஆளாகி இருக்கிறார். இவர் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவன தொழில் முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் அப் நிறுவனம் என்பது ஒரு புதுமையான தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்கவும் வளர்க்கவும் உதவும் ஒரு புதிய வணிகத்திட்டமாகும்.. இவை ஒரு புதிய கண்டுபிடிப்பினை சந்தைக்கு கொண்டு வர உதவுகின்றன. ஒரு புதிய இளம் வணிகத்தின் ஆரம்ப கட்டமாக தொடங்கும் இவை, நாளடைவில் ஒரு பெரிய வணிகமாக வளரக்கூடியவை.
இந்திய அரசாங்கம், இந்தியாவில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை அளித்து ஊக்குவித்து வருகிறது. இத்திட்டம் 2016 இல் தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் இந்தியாவை வேலை உருவாக்குபவர்களின் நாடாக மாற்றுவதற்கு முயல்கிறது
இந்நிலையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆலிவர் ஜோன்ஸ் தன்னை நாய் கடித்ததால் மனம் சோர்ந்து விடவில்லை. இந்தியாவில் 100 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 879 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஸ்டார்ட் அப்களை நிறுவி அவற்றை செயல்படுத்தை மும்முரமாக தொடர இருக்கிறார். வீடியோ கேம் டிசைனரான இவர் பாம்பே பிளே, மூன்ஃபிராக் ஆகிய நிறுவனங்களை நிறுவி உள்ளார்.
இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பெங்களூருவில் பழைய விமான நிலைய டெர்மினலுக்கு அருகே காலையில் ஓட்ட பயிற்சிக்கு சென்றபோது, தன்னை தெருநாய் ஒன்று கடித்து விட்டதாகவும், மருத்துவமனையில் இதற்கு தற்போது சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருக்கிறார். 350 ரூபாய்க்கே ரேபிஸ் தடுப்பூசி கிடைப்பதை அவர் பாராட்டியும் உள்ளார். தற்போது அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் அடுத்த அடுத்த மாதங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
அவருடைய இந்த பதிவிற்கு ஏராளமானோர் தம் எதிர்வினை பதிவுகளையும் செய்துள்ளனர். ஒரு சிலர் அவர் இந்த தெரு நாய் பிரச்சனையால் இந்தியாவில் இருந்து வெளியேறி விடுவீர்களா என கேட்டுள்ளனர், அதற்கு அவர் தான் இந்தியாவிலேயே தொடர்ந்து இருக்க போவதாகவும் இந்தியாவில் 100 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 879 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஸ்டார்ட் அப்களை இந்தியாவில் அவர் நிறுவி அவற்றில் பணியாற்ற உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இவரின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் என நாம் திடமாக நம்பலாம். நம் நாட்டு இளைஞர்களும் இவரைப் போல் அரசின் நிதி உதவியினைப் பெற்று தொழில் முனைவோர்களாகி பல இளைஞர்களுக்கு பணிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க முன்வர வேண்டும்.