தலை தூக்கும் உள்நாட்டு எல்லைப் பிரச்னை!

எல்லைப் பிரச்னை!
எல்லைப் பிரச்னை!

எல்லைப் பிரச்னை தொடர்பாக கர்நாடக வசம் உள்ள பகுதிகளை முழுமையாக மீட்டெடுப்போம் என்று மகாராஷ்டிர அரசு சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கர்நாடகம்-மகாராஷ்டிரம் எல்லைப் பகுதியில் பெல்காம், கார்வார், பீதர், நிபானி, பால்கி உள்பட 865 கிராமங்கள் கர்நாடகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை மீட்டு மகாராஷ்டிரத்துடன் சேர்ப்பதே எங்கள் நோக்கமாகும். எங்களுக்கு சொந்தமான ஒரு சிறு இடத்தைகூட நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் ஆதாரங்களுடன் அவற்றை பெறுவோம் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தீர்மானம் குறித்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா மகாராஷ்டிரம் 'எங்கள் கோபத்தை தூண்டிப் பார்க்கிறது' என்றார்.

எல்லைப் பிரச்னையை எழுப்பிய மகாராஷ்டிரத்துக்கு கண்டனம் தெரிவித்து சமீபத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பொம்மை கொண்டுவந்த இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகத்துக்கு சொந்தமான இடம், தண்ணீர், மொழி ஆகியவற்றில் கன்னடர்களின் நலனை காப்பதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். எங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒற்றுமையுடன் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்வுகாண்போம். மகாராஷ்டிரம் தேவையில்லாமல் எல்லைப் பிரச்னையை உருவாக்கி வருகிறது. கர்நாடக மக்களின் நலனை காக்க இந்த அரசு கடமைப் பட்டுள்ளது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கர்நாடகம்-மகாராஷ்டிரம் இடையில் எல்லைப் பிரச்னை தலை தூக்கியதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதுவரை இரு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் சிவசேனை கட்சியின் உத்தவ் பிரிவைச் சேர்ந்த சஞ்சய் ரெளத், கடந்த 21 ஆம் தேதி, 'சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததைப் போல நாங்களும் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்' என்று பேசி சர்ச்சையை கிளப்பியதும்.

எல்லைப் பிரச்னை சம்பந்தமாக கர்நாடக மாநிலம் தனது நிலையை தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில் மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மெளனம் காத்து வருவது ஏன்? என்று கேட்டு கடந்த ஜூன் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கர்நாடகம்-மகாராஷ்டிரம் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. 1956 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மகாராஷ்டிர அரசு, எல்லையை மீண்டும் வரையறுக்குமாறும், பெலாகவி உள்பட 865 கிராமங்கள் கர்நாடகத்துக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டதாகவும் அதை மீட்டுத் தரவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரியது. ஆனால், அன்றிலிருந்து கர்நாடகம் இந்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com