பாஜகவின் டெய்சி சரண்- திருச்சி சூர்யா சிவா ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் தினந்தோறும் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வந்தார்.
இதனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். கட்சிக்காக 8 ஆண்டுகள் உழைத்த தன்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் தூக்கி எறிந்துவிட்டதாக காயத்ரி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பாஜக நிர்வாகிகள் காயத்ரிக்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட தயாரா, அவரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன் என காயத்ரி சவால் விட்டிருந்தார்.
பாஜகவில் இருந்து வெளியேறி தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் காயத்ரி ரகுராம், வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அண்ணாமலைக்கு எதிராக பாதயாத்திரை தொடங்க இருக்கிறார்.
இந்நிலையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் கடிதம் மூலம் ஆதரவு கேட்டிருந்தார்.
ஆதரவு அளிப்பதாக சீமான் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். மேலும் அக்கடிதத்தில்,
’’அரசியல் வாழ்வில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து நீங்கள் எழுதிய கடிதத்தைக் கண்டேன். அரசியல் வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன காயத்தையும் வலியையும் என்னால் நன்கு உணர முடிகிறது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் பெண்கள் அரசியலுக்கு வருவது என்பது அரிது. அதையும் மீறி பல்வேறு தடைகளை தாண்டி அரசியலுக்கு வரும் ஒன்றிரண்டு பெண்களும் அவதூறுகளாலும் அதிகார மிரட்டல்களாலும் அரசியலை விட்டு ஓரங்கட்டப்படுகின்றனர். ஆனால் அத்தனையையும் எதிர்கொண்டு துணிவுடன் நிலைத்து நிற்கும் பெண்களே அரசியலில் வெற்றி பெற்று நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மனம் தளராது தமது அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்பதே என்னுடைய அறிவுறுத்தல் ஆகும் .
பொது வாழ்விற்கு வந்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ளவும் அவதூறுகளை கடந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை எப்படி அடைய முடியும். முடியாது அல்லவா. அவதூறுகளை தாங்க முடியாதவர்கள் அற்ப வெற்றியைக் கூட பெற முடியாது. எனவே அப்படி ஒரு பண்பட்ட மனப்பக்குவம் தளராத உறுதியும் கொண்டு சோர்வு வராது தொடர்ந்து அரசியல் களத்தில் பணிவுடன் போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பெண்ணடிமை தனத்திற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்தவாதி சாவித்திரி பாய் பூலே, அக்காலத்தில் பெண்களுக்கு கல்வி புகட்டுவதை கடுமையாக எதிர்த்தனர் பழமைவாதிகள். அவர் மீது சேற்றினையும் மழத்தினையும் வீசி பல தொல்லைகள் அளித்தனர் . தினமும் பள்ளி செல்லும் போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்ற பின் வேறொரு சேலை அணிந்து கொள்வார். எத்தனை துன்பங்கள் வந்த போதும் தனது சமூகப் பணியில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. கைவிடவோ இல்லை அம்மையார் சாவித்திரி பாய் பூலே. அவருடைய உள்ள உறுதியே லட்சியத்தை வெல்ல வைக்கும் உந்து சக்தியாக அவருக்கு இருந்தது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இந்திய துணை கண்டத்தையே ஆட்டிப்படைத்த அம்மையார் இந்திரா காந்தியும், தமிழ்நாட்டு அரசியலில் அசைக்க முடியாத ஆற்றலாக இருந்த அம்மையார் ஜெயலலிதாவும் எதிர்கொள்ளாத விமர்சனங்களா? அவதூறுகளா? அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களே உடல் அளவிலும் உள்ள அளவிலும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு மனம் தளராமல் போராடித்தான் இமாலய வெற்றிகளை பெற்றனர் . அவர்களை எல்லாம் முன்மாதிரியாக கொண்டு நீங்கள் முன்னேற முயல வேண்டும்.
கலைத்துறை உள்ளிட்ட சிறப்பு அடையாளம் பெற்ற உங்களைப் போன்ற சில பெண்களே துவண்டு வெளியேறி விட்டால் எளிய பின்னணி கொண்ட பெண்கள் எப்படி அரசியலுக்கு வர துணிவார்கள். வரமாட்டார்கள் அல்லவா? அது மிக மோசமான முன்னுதாரணமாகிவிடும்.
எதற்காகவும் யாருக்காகவும் பயந்து, தான் கொண்ட லட்சியத்தை இழந்து விடக்கூடாது என்பது ஒவ்வொரு பெண்ணும் ஏற்க வேண்டிய உறுதிமொழி ஆகும். அந்த வகையில் நீங்கள் மனம் கலங்காது தொடர்ந்து அரசியல் களமாடி மக்கள் தொண்டாற்றி வெற்றிகரமான அரசியல்வாதியாக திகழ என்னுடைய வாழ்த்துக்கள்.’’
இவ்வாறு சீமான் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.