அரசியலுக்கு வந்துடாதீங்க… ரசிகர்கள் கோரிக்கை.

அரசியலுக்கு வந்துடாதீங்க… ரசிகர்கள் கோரிக்கை.
Published on

ரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வேண்டுகோள் வைப்பதும், போராட்டம் நடத்துவதையும் பார்த்து சலித்துப் போன தமிழ்நாட்டினருக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். ஒரு தேசியக் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் ஒரு நடிகரை, வேண்டவே வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து நிறைய பேர் வெளியேறி பா.ஜ.கவில் இணைவதும், இரு தரப்பிலும் புதிதாக சில முகங்கள் சேர்ந்து தேர்தலில் போட்டியிட தயாராவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கன்னட சினிமாவின் முக்கியமான ஸ்டாரான கிச்சா சுதீப், பா.ஜ.கவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தோஷப்பட வேண்டிய ரசிகர்களோ, பதறிப்போய் அரசியலுக்கு வராதீர்கள் என்கிற கோரிக்கையோடு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997ஆம் ஆண்டு அறிமுகமானவர். கன்னடம் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகனாகவும், எதிர் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

தமிழில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ’நான் ஈ’ படத்தின் மூலம் தேசிய அளவில் பிரலமடைந்த சுதீப், பின்னர் பல தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று அரசியலில் ஆர்வம் காட்ட முடிவெடுத்த சுதீப், தேசியக் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார்.

அரசியலில் இறங்குமாறு தன்னை சந்திப்பவர்கள் ஆலோசனை சொல்லியிருப்பதாக குறிப்பிட்டுள்ள நடிகர் சுதீப், ஆளும் பா.ஜ.க அரசுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரித்து, கர்நாடகா முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

சுதீப்பின் பா.ஜக ஆதரவு நிலைப்பாடு, கர்நாடக எதிர்க் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது. சுதீப்பை யாரோ மிரட்டுவதாகவும், பா.ஜ.கவுக்காக பிரச்சாரம் செய்யாவிட்டால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் மிரட்டுவதற்கு முயற்சி செய்வதாகவும் விமர்சனம் எழுந்தது. என்னை யாரும் மிரட்டவில்லை. ஆத்மார்த்தமாக பா.ஜ.கவுக்கு ஆதரவளிப்பதாக சுதீப் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

சுதீப்பின் வெளிப்படையான பா.ஜ.க ஆதரவு, அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுதீப் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென்று சுதீப் அரசியலில் காட்டும் ஆர்வத்தினால் ரசிகர்கள் அதிருப்தியடைந் திருக்கிறார்கள். உங்களிடமிருந்து நல்ல படங்களை மட்டுமே எதிர்பார்க்கிறோம். ஆகவே, தயவு செய்து அரசியலுக்கு வரவேண்டாம் என்று சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com