காதல் முறிவு என்பது மிகவும் துன்பம் தரும் அனுபவமாகும். அது சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் தாங்கமுடியாத மனவலியைத் தருவதாகும். காதலிப்பவரை மறப்பது என்பது அதைவிட கஷ்டமானதாகும். சீனாவில் ஒரு இளைஞர், தனது முன்னாள் காதலியை பிரிய மனம் இல்லாத நிலையில் மீண்டும் அவளின் அன்பைப் பெறுவதற்கு தவம் இருந்தார்.
முன்னாள் காதலியின் அன்பை மீண்டும் பெற அந்த இளைஞர் செய்த காரியம் என்ன தெரியுமா? நேராக அவள் பணிபுரியும் அலுவலகத்தின் வாசலுக்குச் சென்றார். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் முழங்காலிட்டு 21 மணி நேரம் தவம் இருந்து கெஞ்சினார். அந்த விடியோ இப்போது சீனாவில் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
டாஜ்ஹு என்னுமிடத்தில் அந்த பெண்ணின் அலுவலகம் உள்ளது. கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அங்கு சென்ற முன்னாள் காதலர், அடுத்த நாள் காலை 10 மணி வரை முழங்காலிட்டு மீண்டும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினார். கையில்
ரோஜாப்பூக்களை வைத்துக் கொண்டு மீண்டும் காதல் மலருமா என்று ஏங்கினார். அப்போது மழை பெய்தது. இரவில் குளிர் நடுக்கியது. ஆனாலும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை.
இதற்கிடையே உள்ளூர் மக்கள் பலரும் அவரை சூழ்ந்துகொண்டு முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஜூபை நியூஸ் என்னும் விடியோ ஊடகம் இதை செய்தியாக வெளியிட்டது.
“தயவு செய்து உங்கள் முயற்சியை கைவிடுங்கள் என்று எங்களில் பலரும் கேட்டுக் கொண்டோம். காதலி பாராமுகமாக இருக்கும்போது எதற்கு இந்த வேதனை. எதற்காக உங்கள் கெளரவத்தை விட்டுக் கொடுக்கிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பியதாக லீ என்பவர் கூறினார்.
காதலிக்காக 21 மணிநேரம் முழங்காலிட்டு, கையில் ரோஜாப்பூக்களுடன் தவம் இருந்தபோதிலும் முன்னாள் காதலி அவரை கண்டுகொள்ளவில்லை.
அவரது செய்கை பலரையும் ஈர்த்தது. போலீஸார்கூட அந்த இடத்துக்கு வந்து அவரை சமாதானப்படுத்தி அவரை வெளியேறுமாறு கூறினர். ஆனால், அந்த இளைஞர் “நான் காதலியின் அன்பைப் பெறுவதற்காக முழங்காலிட்டு தவம் செய்வது சட்டவிரோதமா? இல்லையே. என்னை விட்டுவிடுங்கள்” என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.
கடைசியில் ஒருவழியாக கடும் குளிரை தாங்கமுடியாமல் 21 மணி போராட்டத்தை
கைவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டார் அந்த இளைஞர். பாவம் அவரது முயற்சி வீணானது.