’பணத்தைப் பார்க்காதீர்கள்’. மக்கள் நலனைப் பாருங்கள்

’பணத்தைப் பார்க்காதீர்கள்’. மக்கள் நலனைப் பாருங்கள்
Published on

பிரபலங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத எந்த ஒரு  தயாரிப்பு நிறுவனத்தின் பொருளையும் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் விளம்பரப் படுத்தக்கூடாது என ஒன்றிய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளதை வரவேற்கின்றனர் சமூக அக்கறையாளர்களும் மக்களும்.

     சமூக வலைத்தளங்கள், இன்ஸ்டாகிராம்,  முகநூல்,தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்கள் போன்றவற்றில் பிரபலங்களை முன்னிறுத்தி அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட  பல்வேறு வகையான பொருட்களுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர். இது காட்சி ஊடகம் முன்னேறிய காலத்திலிருந்து  வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அந்த பிரபலங்களே அப்பொருளை வாங்க சொல்லும்போது அதன் தரத்தை ஆராயாமல் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி அவற்றை வாங்கி பயன்படுத்துபவர்களால் அப்பொருளின் மார்கெட் உயர்ந்து விற்பனை அதிகரிக்கும். இப்படி அறிமுகப்படுத்தும் பொருள்களில் குழந்தைகளின் உணவு முதல் தலை சாயம் வரை மக்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் அனைத்தும் அடங்குகிறது.

      இருப்பினும் இந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்களின் தரங்கள் சரியாக இருக்கிறதா என்றால் அது பல கேள்விகளை உள்ளடக்கி உள்ளது. மேலும் அதுபோன்று தரத்தை சோதிக்காமல் வெறுமனே விளம்பரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளும் மோசடிகளும் நடப்பதாக குற்றச்சாட்டுகளும்  தொடர்ந்த வண்ணம் உள்ளன. மேலும் இது குறித்த புகார்கள்  ஒன்றிய அரசுக்கும் அனுப்பப்படுகிறது.

      இந்த நிலையில் ஒன்றிய அரசு நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தரப்பிலிருந்து தற்போது இதன் மீதான புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “பொருட்களை விளம்பரம் செய்யும் நபர்கள் தெளிவான வார்த்தைகளில் அனைவருக்கும் புரியும்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அது பணம் கொடுத்து ஊக்குவிக்க கூடிய விளம்பரமா அல்லது வெறுமனே ஆதாரம் அற்றதா என்று தெரிவிக்க வேண்டும். குறிப்பாக என்ன காரணத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது என்பது குறித்த அனைத்து முழு விபரங்களும் கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் “இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழி நடத்துவதாக நிச்சயம் எடுக்கக் கூடாது என்றும் தனிப்பட்ட முறையில் அந்த குறிப்பிட்ட பொருட்களை விளம்பரப்படுத்தி பயன்படுத்தி அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளாமல் பதிவுகள் எதையும் செய்யக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

     உதாரணத்திற்கு சமீபத்தில் அழகு நிலையம் சென்று பிராண்டட் பொருள்களைப் பயன்படுத்தியதால், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் திருமணமே நின்று போன செய்தியைப் பார்த்தோம். இப்படி வரும் செய்திகள் ஏராளம்.    

பிரபலங்கள் வருமானத்தை மட்டும் பார்க்காமல் தாங்கள் சொல்வதை மட்டுமே நம்பி அந்தப் பொருளை வாங்கும் மக்களின் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியத்தையும் பார்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com