டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம், ஐசிசியில் கவனம் செலுத்துங்கள் மதீஷா பத்திரனாவுக்கு தோனி அறிவுரை.

டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம், ஐசிசியில் கவனம் செலுத்துங்கள் மதீஷா பத்திரனாவுக்கு தோனி அறிவுரை.
Published on

திவேகமாக கீப்பிங் செய்வது, அட்டகாசமாக பில்டிங் செட் பண்ணுவது, போட்டியின் இறுதி கட்டங்களில் வந்து அதிரடியாக விளையாடி ஆட்டத்தை வெற்றி பெற வைப்பது என மகேந்திர சிங் தோனியிடம் இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும், இவை அனைத்தையும் விட தோனியிடம் மக்களுக்கு பிடித்தது அவருடைய தலைமைப் பண்புதான். கிரிக்கெட் ரசிகர்கள் யாரைக் கேட்டாலும் இதை உறுதியாக சொல்வார்கள். 

மேலும், தோனியின் தலைமைப் பண்பில் முக்கியமாகக் கருதப்படுவது, இளம் வீரர்களை அடையாளம் காண்பது. சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா என தோனியின் தலைமையின் கீழ் செதுக்கப்பட்ட வீரர்கள் ஏராளம். இதேபோன்று தற்சமயம் தோனி பட்டை தீட்டிக் கொண்டிருக்கும் வீரர்தான் குட்டி மலிங்கா என ரசிகர்களால் புகழப்படும் மதிஷா பத்திரனா. இந்த 20 வயது மட்டுமே ஆன இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து ஆட்டங்களிலும் மிக முக்கிய துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறார். 

போட்டிக்குப் பிறகு நடக்கும் போஸ்ட் மேட்ச் நிகழ்வுகளில் பெரும்பாலும் பௌலர்கள் நன்றாக பந்து வீசினார்கள், பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள் என ஒட்டு மொத்த அணியையும் ஒன்றாக குறிப்பிட்டு சொல்வது தான் தோனியின் வழக்கமாக இருக்கும். வீரர்களின் ஆட்டத்தை பெயர் குறிப்பிட்டு கேட்கும் பொழுதும், அவர் நன்றாக விளையாடினர் என்று கூறிவிட்டு கடந்து போவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் பத்திரனாவைப் பற்றி எப்போதெல்லாம் அவரிடம் கேள்வி எழுப்பப் படுகிறதோ, அப்போதெல்லாம் தோனியிடமிருந்து வருவது முழுக்க முழுக்க புகழாரம் தான். தோனி ஒருவரை புகழ்வதென்பது அரிதான நிகழ்வாகும். 

இந்நிலையில், தோனியே ஆச்சரியப்படும் வகையில்  பத்திரனாவிடம் அப்படி என்ன திறமை இருக்கிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாகவே இருக்கிறது. 

இந்த கேள்விக்கு தோனியே அளித்த பதில் என்னவென்றால், "நார்மலான பௌலிங் ஆக்சன் இல்லாமல் மாறுபட்ட பௌலிங் ஆக்சன் கொண்ட பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை எதிர்கொள்வது, பேட்ஸ்மன்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். அதுதான் பத்திரனாவிடம் சிறப்பாக இருக்கிறது. பௌலிங் ஆக்சன் மட்டுமின்றி, அவர் பந்து வீசும் வேகம், ஒவ்வொரு பந்திலும் அவர் காட்டும் வித்தியாசம், ஒவ்வொரு போட்டியிலும் சீராக விளையாடுவது என பல விஷயங்கள் பத்திரனாவை சிறப்பாக பேசவைக்கிறது" என தோனி புகழ்ந்து தள்ளிவிட்டார். 

இதையும் தாண்டி, தோனி சொன்ன இன்னொரு விஷயம் தான், கிரிக்கெட் உலகில் தற்போது பேசுபொருளாக இருக்கிறது. பத்திரனா டெஸ்ட் போட்டிகள் பக்கமே செல்லாமல், ஒரு நாள் போட்டிகளிலும் குறைவாகவே அவரை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு இளம் வீரர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவரை ஐசிசி போட்டிகளில் விளையாடுவதற்காக தயார்படுத்த வேண்டும். பெரிய தொடர்களில் முக்கிய பங்குவகிக்கும் வீரராக அவர் கட்டாயம் இருப்பார். இதை சரியாக செய்தால் இலங்கை அணிக்கு பெரிய சொத்தாக பத்திரனா இருப்பார் என தலையில் கிரீடம் வைக்காத குறையாக அவருக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் தல தோனி.

தோனி மாதிரியான ஒரு லெஜெண்ட் சொல்லும் அறிவுரையை, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நிச்சயம் கேட்பார்கள் என எந்த தயக்கமுமின்றி சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com