தேர்தல் இல்லாததால் திருக்குறள் நினைவு வரவில்லையா? கனிமொழி காட்டம்!

Kanimozhi
Kanimozhi
Published on

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார். அப்போது, “சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம். நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்பட தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றிய 20க்கும் மேற்பட்ட சட்ட வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்.

இது குறித்து மேலும் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரதமர் மோடி தமிழின் உன்னதத்தைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார். ஆனால், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்துக்கு 198.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மையத்திற்கு ரூ.11.86 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் நிர்வாக செலவுகளுக்கே போதாது. பிறகு எங்கே ஆய்வு நடத்துவது, நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டும் நிற்கவில்லை. மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கருவியாக பயன்படுத்தப் படுத்துகிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களிடம் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த முறை பட்ஜெட்டில் நீங்கள் திருக்குறளை மறந்துவிட்டீர்கள். ஏனெனில் இப்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், “ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால், பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது” என்றும் கூறினார்.

“கீழடி ஆராய்ச்சி முடிவுகளில் கி.மு 600 க்கும் முற்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால், அதனை வெளியிடுவதில் கூட மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. இப்படி நீங்கள் எங்களை தொடர்ந்து அவமதித்தால் இந்த நாட்டு மக்கள் உங்களோடு இணைந்து நடக்கமாட்டார்கள்” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com