ட்விட்டரில் டவுட்! எலான் மஸ்க்கிற்கு தாழ்மையோடு கோரிக்கை அனுப்பிய அஸ்வின்!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ட்விட்டரில் தனக்கு ஏற்பட்ட டவுட்டை நேரடியாக எலான் மஸ்க்கிடமே கோரிக்கை வைத்து ட்வீட் செய்துள்ள விஷயம் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வென்றதோடு மட்டுமல்லாமல் தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில், அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்காக, பல்வேறு சாதனைகளைப் படைத்து ரசிகர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், சமூக வலைதளமான ட்விட்டரிலும் தன்னை ஆக்டிவாக வைத்துவருகிறார்.
அவரது ட்விட்டர் அக்கவுண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், அவருக்கு ட்விட்டரில் சிறிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க்கை டேக் செய்து தாழ்மையான கோரிக்கையை ட்வீட் போட்டு உள்ளார்.
அதன்படி, அந்த ட்வீட்டில், எனது டுவிட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகிறது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. மார்ச் 19-ம் தேதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் சுட்டிக்காட்டுங்கள். ப்ளீஸ். என எலான் மஸ்க்கை டேக் செய்து போட்டுள்ளார்.
இவரது இந்த ட்வீட்டிற்கு, ரசிகர்கள் பலரும, தங்களுக்குத் தெரிந்த தகவல்களை கமெண்ட்களாக பதிவுசெய்து வருகின்றனர்.