டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணி; ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்!

டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணி; ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்!
Published on

குறுவை சாகுபடிக்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப் படுத்தப்பட்டு உள்ளது. இதனை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 37 ஆறுகள், 1,970 கி.மீ தொலைவுக்கும், 21,629 கிளை வாய்க்கால்கள் 24,524 கி.மீ தொலைவுக்கும் அமைந்துள்ளன. இதுதவிர, 924 முறை சார்ந்த ஏரிகளும், 1,428 முறை சாராத ஏரிகளும் உள்ளன. இதில் ஏரிகள் மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்களின் தொலைவு 2,700 கி.மீ ஆகும்.

மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப் படுத்தப் பட்டு உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 9-ந் தேதி தஞ்சாவூர் சென்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

நாகை,திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com