நாடகமே உலகம்!

நாடகமே உலகம்!

“உலகம் ஒரு நாடக மேடை” என்றார் ஷேக்ஸ்பியர். “நாடகமே இந்த உலகம்; ஆடுவதோ பொம்மலாட்டம்” என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல்.

தேர்தல் அறிவித்தவுடன் நடக்கின்ற கூத்துக்களைப் பார்த்தால் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. “வானத்தைக் கயிறாகத் திரிப்போம்” போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைச் சொல்லி மக்களிடம் வோட்டுப் பிச்சை எடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கம்.

கொள்கை அடிப்படையில் வாக்களிப்பதை விட, கட்சி சார்ந்த வாக்குகள், பொய் பிரசாரத்தை நம்பி வாக்குகள், மதம், சாதி அடிப்படையில் வாக்குகள், பணம் அல்லது பொருள் பெற்றுக்கொண்டு வாக்குகள் ஆகியவைதான் அதிகம். வாக்கு சேகரிக்க வேட்பாளர்கள் போடுகின்ற வேடங்களும் அதிகமாகி வருகின்றன.

மக்களுக்குக் குற்றேவல் செய்யவே பிறந்திருப்பதைப் போல சட்டசபைத் தேர்தலில் அரங்கேற்றிய அரிதாரம் பூசாத நாடகத்தை, தவறாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடத்தினார்கள். தற்போது இடைத் தேர்தலிலும் தொடர்கிறார்கள். வேட்பாளர்கள் மட்டுமல்லாது, அவர்களுக்காக வோட்டு கேட்கும் தலைவர்களும் இதைச் செய்வதுதான் விசித்திரம்.

மாட்டுச் சாணம் அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல், தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம், சாலையோர கடையில் பஜ்ஜி, வடை சுடுதல், தேநீர் தயாரித்தல், ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுதல், கல்லுடைத்தல், துணி துவைத்தல் என்று வாக்கு சேகரிக்கப் போகும் இடங்களில் வாக்காளப் பொதுமக்கள் செய்யும் செயல்களை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு செய்கிறார்கள்.

வாக்குக்காக நடிக்க வேண்டியிருக்கிறதே என்று கூட வெட்கமே இல்லாமல், போட்டோ, வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிய விடுகிறார்கள்.  எதற்காக இந்த நாடகம்? நானும் உங்களைப் போல சாமானியன் என்று காண்பித்துக் கொள்வதற்கா? இல்லை இப்படிச் செய்தால்தான் தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் செய்தி வந்து பிரபலம் ஆகலாம் என்றா?

நடிப்பில் கிடைத்த புகழையும், நன்மதிப்பையும் வைத்து அரசியலில் நுழையும் நடிகர்கள் ஒரு பக்கம் என்றால், எங்களுக்கும் நடிக்கத் தெரியும் என்று வேடம் போடும் அரசியல் வாதிகள் இன்னொரு பக்கம்.

அரசியல் செய்ய கொள்கை, மக்கள் சேவை இவையெல்லாம் முக்கியமில்லை. நடிப்புத்தான் தேவை என்றாகி விட்டது.

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com