காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் - போலீசார் அதிரடி

 காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள்  - போலீசார் அதிரடி

கேரளாவில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஈப்பன் வர்க்கீஸ் என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிகளை போலிஸார் அதிரடி சோதனையில் கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் குமுளி பகுதியை சேர்ந்தவர் ஈப்பன் வர்க்கீஸ் (70). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவரது  வீட்டில் காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தோல் மற்றும் கொம்புகளை பதுக்கி வைத்திருத்தல் மற்றும்  சூதாட்டம் விளையாடுதல்  உள்ளிட்ட சில சட்டவிரோத செயல்கள்  நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில்  போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டின் மேல் தளத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த சிலர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர். தொடர்ந்து  காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்த போது 2 நாட்டுத்துப்பாக்கிகள், 2 ஏர் ரைபிள்கள் மற்றும் பல தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஈப்பன் வர்கீஸ் பணியில் இருந்த காலத்தில் லஞ்சம் வாங்குதல், திருட்டு, மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில்  தமிழக எல்லையில் உள்ள வீடுகளைச் சுற்றி சூதாட்ட கிளப், வனவிலங்கு வேட்டை, ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது.

கடந்த  2022 நவம்பரில் டி.எஸ்.பி தலைமையில் போலீசார் தமிழக எல்லைப் பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் 2,51,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.  ஈப்பன் வர்க்கீஸும் குட்டிகானத்தில் உள்ள சில அதிகாரிகளும் இணைந்து குமுளி பகுதியில் லாட்டரி கிளப் நடத்தி வருவதாகவும்,மேலும் இவர் தலைமையில் வனவிலங்குகள் வேட்டையாடபடுவதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராட்டுப்பேட்டை, ஏலப்பாறை, கட்டப்பனை, குமுளி, தோப்பிரம்குடியை பகுதியைச் சார்ந்த  9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,30,040 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com