தமிழக கடலோர கண்காணிப்பு பணியில் விரைவில் ‘சூப்பர் போலிஸ்’ டிரோன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
-இதுகுறித்து சென்னை காவல்துறை தெரிவித்ததாவது:
தமிழகத்தில் காவல்துறை பல்வேறு கண்காணிப்புப் பணிகளுக்கு அளவில்லா விமானங்கள் எனப்படும் டிரோன்களை பயன்படுத்த தயாராகி வருகிறது.
இதற்காக சென்னை அடையாறு அருகே சாஸ்திரி நகரில் டிரோன் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 காவலர்கள் பணியிலிருந்து, டிரோன்களை கண்காணிப்பர். விரைவில் கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியிலும் டிரோன்கள் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
கடலில் யாரேனும் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தால் உடனடியாக இதுபோன்ற டிரோன்கள் மூலம் கன்டறிந்து காப்பாற்றலாம். மேலும், எடை தூக்கும் டிரோன்கள் வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் மனிதர்களை நெருங்க முடியாத இடங்களில் பறந்து சென்று பொருட்களையும், மருந்துகளையும் எடுத்து சென்று கொடுப்பதற்கு பயன்படும்.
இன்னும் 15 நாட்களில் டிரோன் காவல் நிலையத்தை முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தி, செயல்முறை பிரச்சனைகள் ஆய்வு செய்யப்படும். பின்னர் இந்த டிரோன்கள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த டிரோன் காவல் நிலையத்தை திறந்து வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
-இவ்வாறு சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.