ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஒரு பார்வை!

ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஒரு பார்வை!
Published on

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆம் நம் உடல் நிலை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கை நம்மைத் தேடி வரும். ஆனால் எத்தனை பேர்  முழுமையான ஆரோக்கியத்துடன் உள்ளனர்? இன்று கல்வியறிவும் சுதந்திரமும் அறிவியல் முன்னேற்றமும் பெருகி விட்டாலும் போதை எனும் அரக்கனிடம் மாட்டிக்கொண்டு இந்த சமூகம் பாழாகி வருவதை அனைவரும் அறிவோம் . போதையினால் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் முதல் பொது வெளியில் நிகழும்  ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடும்ப வன்முறைகள் வரை எத்தனை எத்தனை சம்பவங்கள்?

சமூகம் சீரழியப் பெரும் காரணமாக இருக்கும் போதைப்பொருள்களை ஒழிக்கவும் உலக அளவில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் அதன்  தீமை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  ஜூன் மாதம் 26 ஆம் தேதி  சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஐநா சபை அறிவித்ததன் பெயரில் 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் நபர்கள் போதைப் பொருளை உபயோகிக்கிறார்கள் என்கிறது ஐநா சபையின் அறிக்கைத் தகவல்.

முன்பு கள், புகையிலை மற்றும் சுருட்டுகள் பீடிகள் சிகரெட்டுகள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் அதிக போதை தரும் வஸ்துகளான  ஹெராயின், அபின், கஞ்சா, மது போன்ற போதைப்பொருள்கள் வெளிநாட்டின் உபயத்தில் இங்கு கடத்தி வரப்பட்டு போதை ஆசாமிகளின் பயன்பாட்டுக்கு வந்தது. இதுபோன்ற போதைப்பொருள்களை ஒரு முறை உபயோகிக்கத் துவங்கி விட்டால் புலி வாலைப் பிடித்த கதையாக அதை விடவே முடியாமல் அடிமையாகி வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்கு வந்த பின்பே தவறு என்று உணரும் மனிதர்களும் உண்டு. ஆனால் “கண் போன பின் சூரிய நமஸ்காரம் போல் போதையால் உடலில் உள்ள சத்துகளை எல்லாம் இழந்து சக்கையான பின் தவறை உணர்ந்து என்ன பயன்?

அப்போதெல்லாம் சிகரெட்டை மறைத்து குடித்து வந்தவர்கள் இன்று மதுவையும் வீட்டுக் கூடத்தில் வாரிசுகளுடன் சேர்ந்து அருந்தும் மேனாட்டு நாகரீகத்தில் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். காரணம் சினிமாக்களும் மாறிவிட்ட வாழ்க்கை முறைகளும் எளித்தாக கிடைக்கும் போதைப்பொருள்களுமே. குடிப்பதும், கஞ்சா அடிப்பதும் ஹீரோயிசம் என்று காட்சிப்படுத்தும் சினிமாக்களை எப்படித் திருத்துவது? சமூகப் பொறுப்பு அற்ற சிலரின் திரைக் காட்சிகள் காணும் சிறுவர் சிறுமிகள் எதுவும் தவறில்லை எனும் மனப்பான்மையில் தள்ளப்பட்டு மாணவப்பருவத்திலேயே போதைக்கு அடிமையாகி வருவது வேதனைக்குரிய விஷயம்.

ஆதரவற்ற நிலை, போதிய அன்பு கிடைக்காமை, விரக்தி, அறியாமை, உளவியல் குறைபாடுகள், பொழுதுபோக்கு, தற்காலிக உற்சாகம் போன்ற நிவாரணங்கள் தேடியே பெரும்பாலோருக்கு போதை அறிமுகமாகிறது. இதுவே நாளடைவில் அவர்களை வீழ்த்தி மரணம் வரை கொண்டு விடுகிறது.

ஒருவர் போதைக்கு அடிமையானால் பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல. அவரது குடும்பமும்தான். முக்கியமாக அவர்களின் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி அவர்களும் போதையின் வழியில் செல்லும் வாய்ப்புகள் அதிகம். போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் தகப்பனின் பிள்ளைகளை பரிதாபமாக பார்க்கும் உலகம் அவர்களின் நியாயமான  உணர்வுகளை முடக்கியும் விடுகிறது. பொருளாதாரம் கல்வி வேலை போன்றவற்றில் பின்னடைவை சந்திக்க வைக்கிறது. போதைப் பொருள்களைஅதிகம் பயன்படுத்துவதால் கொள்ளை வன்முறை கொலை, தற்கொலை போன்ற பல குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் நலக்குறைவு மற்றும் மனநலபாதிப்புகளும் அதிகமாகி குடும்பக் கட்டமைபுகள் உடைந்து வருகிறது.

தற்போது உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வைக்கும் போதைக்கு ஆண்கள் பெண்கள் சிறியவர் பெரியவர் என்ற வித்தியாசமின்றி அடிமையாகி வருவது நிச்சயம் நம்மை வேதனையில் ஆழ்த்தும்  விசயமாக உள்ளது. வீதிக்கு வீதி இருக்கும் டாஸ்மாக்குகள் பள்ளிகளின் வாசலிலேயே கிடைக்கும் கஞ்சா அபின் போன்றவைகள் காவல்துறையின் எச்சரிக்கையையும் கண்காணிப்பையும்  மீறி உலாவரும் கடத்தல்காரர்கள் என போதையின் சாம்ராஜ்யம் எங்கும் பரவிக் கிடக்கிறது. இதில் கவனமாக இருந்து அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வுடன்அன்பையும்  தந்து பிள்ளைகளை போதையிலிருந்து பாதுக்காக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது எனலாம்.

போதையின் தீமைகளை எடுத்துச் சொல்லும் பொறுப்பும் கடமையும் பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது என்பதைப் புரிந்து போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதைக்கு எதிரான மனப்பாங்கும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com