இந்திய புற்று நோயாளிகளுக்கு வெளிநாட்டு சிகிச்சை முறை பொருந்தாது - வெளியான ஆராய்ச்சி முடிவுகள்..!

treatment
cancer treatmentImg credit: freepik
Published on

சென்னை ஐஐடி (IIT Madras) உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் மகாலிங்கம், "இந்தியப் புற்றுநோயாளிகளுக்கு இனி வெளிநாட்டுச் சிகிச்சை முறைகள் முழுமையாகப் பொருந்தாது" எனக் கூறியுள்ளார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் நிதியுதவியுடன், சென்னை ஐஐடி புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பி.சி.ஜி.ஏ (BCGA) என்னும் 'பாரத் புற்றுநோய் ஜீனோம் அட்லஸ்' (Bharat Cancer Genome Atlas) உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஐஐடி இயக்குனர் காமக்கோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "சென்னை ஐஐடியில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மார்பகம், ரத்தம், குடல் மற்றும் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1,500 பேரிடம் தரவுகளைச் சேகரித்து, 'ஜீனோம்' எனப்படும் மரபணு தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்துள்ளோம். இந்த முடிவுகளைச் சுகாதாரத் துறைக்கு இலவசமாக வழங்கும் 'பாரத் புற்றுநோய் ஜீனோம் அட்லஸ்' திட்டத்தை உருவாக்கியுள்ளோம். நாட்டிலேயே இதுவே முதல் முறை. இது மருத்துவச் சிகிச்சை முறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்" என்றார்.

தொடர்ந்து பேராசிரியர் மகாலிங்கம் கூறியதாவது:

"நம் நாட்டில் இதுவரை மேற்கத்திய நாடுகளின் புற்றுநோய் சிகிச்சை முறைகளே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை இந்தியர்களுக்குப் பெரிதளவில் பலன் அளிக்கவில்லை. இந்தியர்களில் 9 பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனைத் துல்லியமாகக் கண்டறிய இந்த 'ஜீனோம்' பகுப்பாய்வு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினோம்.

நாட்டின் முக்கியப் புற்றுநோய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 1,500 பேரின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்ததில், இந்தியாவில் பெரும்பாலும் 'பிரக்கா-1, 2' (BRCA-1, 2) என்ற மரபணு மாற்றத்திற்கான சிகிச்சைகளே அளிக்கப்படுகின்றன என்பது தெரியவந்தது.

ஆனால், நாங்கள் 900 மார்பகப் புற்றுநோயாளிகளின் மரபணுத் தொடர்களை ஆராய்ந்தபோது, பிரக்கா வகை ஜீன்களின் பாதிப்பு வெறும் 6 சதவீதம் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்தோம். மிக முக்கியமாக, 57 சதவீதம் பேருக்கு வேறு விதமான மரபணு மாறுபாடுகள் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

குறிப்பாக, 30 முதல் 70 வயதுள்ள மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமிழகப் பெண்களின் ஜீன்களில், வெவ்வேறு விதமான மரபணுக்களில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்படாத பிரக்கா-1, 2 ஜீன்களுக்கு 'கீமோதெரபி' உள்ளிட்ட சிகிச்சைகளை அளிக்கும்போது, நோய் பாதிப்பு குறையாததோடு, தேவையற்ற பக்க விளைவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

அதனால் தான் புற்றுநோய் மருத்துவர்களுக்கு முறையான புரிதலை ஏற்படுத்தும் வகையில், 'பாரத் கேன்சர் ஜீனோம் கிரிட்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும் அவர்கள் பாதிக்கப்பட்ட ஜீனின் தன்மைக்கேற்பத் தனித்தனி சிகிச்சைகளை (Personalized Medicine) அளிக்க வேண்டி இருக்கும். இதற்காக இந்திய மருத்துவம் மற்றும் மருந்தியல் துறைகள் அடுத்த கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அந்த ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் bcga.iitm.ac.in என்ற இணையதளத்தில் தரவுகளைப் பதிவேற்றியுள்ளோம்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com