‘இனி மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்’: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!

மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
disposing of medical waste
disposing of medical wasteimg credit- usbioclean.com
Published on

தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் தமிழக எல்லைகளில் கொட்டப்படும் சம்பவம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய புகாா்களையொட்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, ‘மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் 1982-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் சட்டமன்றத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 1982-ம் ஆண்டு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தாா். இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

இதன்படி தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடா்புடைய குற்றவாளிகள், திருட்டு வீடியோ, மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரை விசாரணையின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைப்பதுபோன்று, உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோரையும் விசாரணையின்றி தடுப்புக் காவல் சட்டப்படி சிறையில் வைக்க இந்தத் திருத்தம் அனுமதியளித்துள்ளது. அதனடிப்படையில் நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டம், ஜூலை 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பொது இடங்களில் உயிரி மருத்துவ கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தினாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணைக்கு சமமாக விசாரணையின்றி குற்றம் செய்தவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அத்தகைய நபர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

இதையும் படியுங்கள்:
அமராவதி ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவு நீர் - அரசு அதிகாரிகள் விளக்கம் தரவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!
disposing of medical waste

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும். எனவே இனி மருத்துவ கழிவுகளை கண்டபடி கொட்டாமல் முறைப்படி அகற்ற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com