

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் (SROs) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் (DVAC) தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளைப் (Unapproved Layouts) பதிவு செய்வதற்குச் சட்டப்பூர்வமாகத் தடை உள்ளது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்ய செண்டு ஒன்றிற்கு லட்சங்களில் லஞ்சம் வாங்கி பதிவு செய்வதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியாகி இருந்தது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 60 சார் பதிவாளார் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, DVAC-ஐச் சேர்ந்த சுமார் 320 ஆண் மற்றும் பெண் காவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு (SROs) ஒரே நேரத்தில் நுழைந்தனர்.
இக்குழுக்கள் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, கணக்கில் வராத பணத்தைக் கண்டறியவும், பதிவுச் செயல்முறையில் ஏதேனும் முறைகேடுகள் உள்ளனவா என்பதை அடையாளம் காணவும் சோதனைகளை மேற்கொண்டன.
சென்னை, திருச்சி, தருமபுரி, தேனி, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விருதுநகர், கோவை, நெல்லை, கன்னியாகுமரி முதலான தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் போது கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பாக பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை சட்ட விரோதமாக சார் பதிவாளர்கள் பதிவு செய்து கொடுப்பது தற்போது வரை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்வதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை எச்சரித்திருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மனைப்பிரிவுகளை பதிவு செய்வதும், லஞ்சம் வாங்குவதும் தொடர்ந்து வருகிறது.
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பதிவு செய்யும் போது வழக்குகள் பதிவு செய்யவும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து நடவடிக்கையை தொடங்கவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தற்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க லஞ்ச ஒழிப்புதுறை மூலம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தற்போது முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக முகூர்த்த தினங்களில் பத்திர பதிவுகள் அதிகம் நடக்கும். நேற்று முகூர்த்த தினம் என்பதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திடீர் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த சோதனையில் கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.20 லட்சம், விருதுநகரில் ரூ.54 ஆயிரம், சாத்தூரில் ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை விளாங்குடியில் ரூ.90 ஆயிரம், திருவள்ளூரில் ரூ.2.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சேலம் கிழக்கில் உள்ள அலுவலகத்தில் ரூ.3.18 லட்சமும், திருச்சி திருவெறும்பூரில் ரூ.80 ஆயிரமும் என கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை பார்த்ததும் கையில் இருந்த லஞ்ச பணத்தை ஆங்காங்கே அள்ளி வீசி உள்ளனர் ஊழியர்கள்.
அப்படி அலுவலகத்திற்குள்ளேயே ஊழியர்களால் வீசப்பட்ட லஞ்ச பணத்தை சேகரித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையை அடுத்து இதுவரை திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த முழுவிவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here