கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ‘இந்த வெற்றியை நான் பெரிதாகக் கொண்டாடப்போவதில்லை. எனது மகன் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதே எனது லட்சியம்’ என விரக்தியில் பேசியவர், இன்று அவர் மேடையில் பேசியது பரபரப்புச் செய்தியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இன்று சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈ.வி.கே.ஸ்.இளங்கோவனுக்கு பலரும் மாலைகள் அணிவித்தும், சால்வைகள் போர்த்தியும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் மாநகர துணை மேயர் சாரதா தேவியும் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவனுக்கு சால்வை அணிவிக்க மேடையில் ஏறினார். கட்சிக்காரர்கள் துணை மேயரிடம், ‘கொஞ்சம் பொறுங்கள்’ என்று கூறியதைக் காதில் வாங்காமல், ஈ.வி.கே.ஸ்.இளங்கோவனுக்கு சால்வையைப் போர்த்தினார்.
சாரதா தேவி போர்த்திய சால்வையை ஏற்றுக்கொண்ட இளங்கோவன், அந்த மேடையில் கட்சியினர் பலர் முன்னிலையில், ‘‘என்ன சாரதா… வரவர கலராயிட்ட போற…” என்று கூறியது மேடையில் இருந்த பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் சிரிப்பு ஒன்றையே பதிலாகத் தந்தார் துணை மேயர் சாரதா தேவி.
‘இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாசாரமோ’என்று பலருக்கும் எண்ணத் தோன்றும் விதமாக அமைந்தது இந்த நிகழ்ச்சி! வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மேடை நாகரிகம் என்பது அனைவருக்கும் வேண்டும்தானே!