உலகமே வியந்துப் பார்க்கும் அளவிற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
காலநிலை மாற்றத்தால் ஆங்காங்கே கடுமையான புயல், வெயில், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக உலகம் முழுவதும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. அந்தவகையில் நேற்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்நிலநடுக்கம் இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், தாய்லாந்து மற்றும் மியான்மரில் கட்டடங்கள் அனைத்தும் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் 1000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2000 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தாய்லாந்தில் முழுவதுமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மியான்மரில் முற்றிலுமாக இணைய சேவை முடங்கியுள்ளதால், அங்கு என்ன நடக்கிறது என்பது வெளியுலகத்துக்கு அவ்வளவாக தெரியவில்லை.
இந்தியா உணவுகள், டென்ட், முதலுதவி மருந்துகள், துணிகள் அடங்கிய 15 டன் நிவாரணப் பொருள்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியிருக்கிறது. பல்வேறு அண்டை நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
ஏற்கனவே நிலை இப்படி மோசமாக இருக்கும் நிலையில், மீண்டும் மியான்மரில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இன்று பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவானதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு பல உதவிகளை செய்து வருகின்றன. மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
நேற்றைய நிலநடுக்கத்தால் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. தோண்ட தோண்ட உடல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இது உலக மக்களையே வாய்ப்பிழக்க வைத்திருக்கிறது.