சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை போன்ற இடங்களில் சில கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் பீதியடைந்ததாகவும் தகவல்கள் பரவின. சென்னை அண்ணாசாலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பரவிய தகவலால் ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த வாரத்தில் துருக்கி, சிரியா போன்ற பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உலகையே பீதியில் ஆழ்த்தியது. அதன் பிறகும் நியூசிலாந்து உட்பட சில நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மறுபடியும் துருக்கி சிரிய எல்லையில் நிலநடுக்கம் 6.3 ஆக பதிவாகியது. இதன் காரணமாக லேசான நில அதிர்வு ஏற்பட்டாலே மக்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வீடுகளை அலுவலகத்தை விட்டு ஓடுகிறார்கள்.
சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட நில அதிர்வு மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டது என்ற தகவல் தவறானது என்றும், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே மெட்ரோ பணிகள் ஏதும் நடைபெறவில்லை எனவும் மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தரவுகள் படி சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.
“சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதாக என டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டுள்ளது. இதுவரை அத்தகைய தகவல்கள் எதுவும் அந்த மையத்தில் இருந்து கிடைக்கப்பெறவில்லை” என தெரிவித்தார்.