நியூசிலாந்து நாட்டில் நேற்று இரவு 7.38 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டனின் வடமேற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் பதறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உலகையே அதிர வைத்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் அங்கு பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பல மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் ஏற்கனவே கேப்ரியல்லா சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போன நிலையில் தற்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கேப்ரியல்லா சூறாவளி, கனமழை, நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து தாக்கியுள்ளது நியூசிலாந்து மக்களை கடும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
நேற்று நியூசிலாந்தின் வெலிங்டன் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 30 வினாடிகள் நீடித்ததால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஆக்லாந்து மற்றும் கிறைஸ்ட் சர்ச் நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.