குற்றவாளிகளை ஈஸியாப் பிடிக்க இ-பீட் செயலி - இது ஸ்மார்ட்லேண்ட் போலீஸ்!

இ-பீட் செயலி
இ-பீட் செயலி

சேலம் மாநகர காவல்துறை, இ-பீட் என்னும் டிஜிட்டல் ரோந்து திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் குற்றச் செயல்கள் பற்றிய விபரங்கள் காவலன் செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். மாநகர கண்காணிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்த முடியும் என்று சேலம் மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

இ-பீட் என்னும் செயலி சென்ற ஆண்டே தமிழ்நாட்டின் சில இடங்களில் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களை கண்காணிக்க பரிசோதனை முறையில் ஆரம்பிக்கப்பட்டது. புதிய ஆண்டில் தமிழ்நாட்டில் இன்னும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

குற்றச் செயல்களை தடுப்பதற்காக ரோந்து செல்லும் காவல்துறையினர், இரவு, பகல் நேரங்களிலும் எங்கெங்கு ரோந்து சென்றதாக குறிப்பு எழுதுவார்கள். சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டங்களோ வேறு ஏதாவது இருந்தாலோ அதில் பதிவு செய்வார்கள். பட்டா (பீட்) எனப்படும் குறிப்பேடு, ரோந்து செல்லும் காவல்துறையினரால் எழுதப்படும். இத்தகைய பீட் குறிப்புகள், பல சிக்கலான வழக்குகளின் புலனாய்வுகளில் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன.

பீட் குறிப்புகளை சீர்படுத்தி, அதில் தவறுகள் நிகழாத வண்ணம் தொகுத்து உடனடியாக தருவதற்காக இ பட்டா என்னும் செயலியை தமிழக காவல்துறை உருவாக்கியது. இனி காவல்துறையினர் பீட் குறிப்புகள் எழுதத் தேவையில்லை. கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும். பீட் தகவல்களை உடனுக்குடன் பெறுவதோடு, குற்றச் செயல்களை தடுக்க உடனடியாக நடவடிக்கையில் இறங்கவும் முடியும்.

மாநகராட்சியின் எல்லைக்குள் எத்தனை ரோந்து வாகனங்கள், எங்கெங்கே சென்று கொண்டிருக்கின்றன. இதுவரையிலான சோதனைகளில் கிடைத்த விஷயங்கள், எந்த இடங்களில் எந்த காவல்துறை அதிகாரி சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் போன்ற தகவல்களை உடனுக்குடன் உயர் அதிகாரிகள் பெற முடியும்.

காவலன் என்னும் செயலி மூலம் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி பெரிய அளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் இபீட் செயலி மூலம் குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடிவதோடு, காவல்துறையினரின் பணிச்சுமையையும் குறைக்க முடியும் என்கிறார்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள்.

தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டு உடன் ஒப்பிடுவார்கள். இனி, இது ஸ்மார்ட் லேண்ட் போலீஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com