உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை இந்தியாவையும் பாதிக்கும் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக் கூட்டத்தில் பேசிய மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நாராயண ரானே அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதார வலிமையில் முதல் 20 இடங்களில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்ற பிறகு முதல் முறையாக அதன் உள்கட்டமைப்பு கூட்டம் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது.
நகரங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுதல், நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு நிதியளித்தல், எதிர்காலத்துக்கு தாயாராவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் நாராயண ரானே, "இந்தியா தலைமையேற்று நடத்தும் இந்த கூட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் பங்கேற்றுள்ளன. இந்தியாவும் வளர்ந்த நாடாக விரும்புகிறது. கடந்த 8 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி மூலம் இந்தியா பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடிதான்.
தற்போது வளர்ந்த நாடுகள் பலவும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வருகின்றன என்பதுதான் உண்மை. இந்தியாவிலும் ஜூன் மாதத்துக்கு பிறகு பொருளாதார மந்த நிலை ஏற்படலாம். எனினும், இது நாட்டு மக்களின் நலனை பாதிக்காத வகையில் பிரதமர் மோடியும் மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்றார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டாலும் இந்தியாவில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு கூறிவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்று புள்ளிவிவரங்களுடன் தெரிவித்திருந்தார்.
இப்போது அவரது பேச்சுக்கு நேர் எதிர்மாறாக நாராயண் ரானேவின் பேச்சு அமைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்பதால் நிபுணர்கள் இப்போதே அதுபற்றிய விவாதத்தை தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.