நாட்டில் பொருளாதார நெருக்கடி: மக்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

நாட்டில் பொருளாதார நெருக்கடி: மக்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

மொத்தம் 3,750 கி.மீ. தொலைவு கொண்ட இந்த யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா வழியாக பஞ்சாப் சென்றடைந்துள்ளது. இந்த யாத்திரை வரும் 30 தேதி மகாத்மா காந்தி நினைவுநாளில் காஷ்மீரீல் நிறைவடைகிறது.

அவரது இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்போது பஞ்சாபில் நடைபெறும் யாத்திரை, காஷ்மீரை நெருங்கும் நிலையில் ராகுல் காந்தி, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் தற்போதைய மத்திய அரசின் கீழ் நாட்டில் பொருளாதார நெருக்கடி உருவாகி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இளைஞர்களுக்கு வேலையில்லை, விலைவாசியோ தாங்கமுடியவில்லை, விவசாயிகளும் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். ஆனால், நாட்டின் செல்வம் கார்ப்பொரேட் நிறவனங்களின் கையில் உள்ளது.

வேலையில்லாததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்களின் வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அவர்களின் எதிர்கால கனவுகளும் கலைந்து வருகின்றது. மக்கள் எதிலும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளனர்” என்று ராகுல் மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி எழுதிய கடிதத்தின் நகலை வீடுவீடாகச் சென்று கொடுத்து வருகிறார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒற்றுமை யாத்திரையின் தொடர் நிகழ்வாக ஜனவரி 26 முதல் மார்ச் 26 வரை ‘ஹாத் சே ஹாத் ஜடோ’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள், 6 லட்சம் கிராமங்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் ராகுலின் கடிதம் வழங்கப்பட உள்ளது.

“பன்முகத்தன்மையுடன் நாம் ஒன்று சேர்ந்து உழைத்தால் ஒழிய நாடு முழுத்திறனை அடையமுடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இந்தியா வெறுப்புணர்வுகளை நிராகரிக்கும் என்று நான் நம்புகிறேன். சாதி, மதங்களைக் கடந்து நாம் உயர வேண்டும். உங்கள் மனதில் உள்ள பயத்தை அகற்றினால் உங்களுக்குள் இருக்கும் வெறுப்பு மறைந்துவிடும்” என்றும் ராகுல் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். ராகுல் கடிதத்துடன் பா.ஜ.க. அரசின் தோல்விகளை பட்டியலும் மக்களிடம் வழங்கப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com