‘மக்களிடம் எடப்பாடிக்கு எந்த செல்வாக்கும் இல்லை’ அமமுக அதிரடி!

‘மக்களிடம் எடப்பாடிக்கு எந்த செல்வாக்கும் இல்லை’ அமமுக அதிரடி!

டந்து முடிந்த ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமியை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுகுறித்து அவர் கடந்த வாரம் பேசுகையில், “மேற்கு மண்டலமே தனது கோட்டை என்று கூறி வந்த எடப்பாடி பழனிச்சாமியால் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏன் வெற்றி பெற முடியவில்லை? ஆளும் திமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தும் அவர்களது கூட்டணியால் எப்படி 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது? பண பலம், இரட்டை இலை சின்னம் இருந்தும் எடப்பாடியால் அந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இரட்டை இலை சின்னம் இல்லாதிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தை பழனிச்சாமியிடம் விட்டு வைத்தால் மேலும் பலவீனமாகிவிடும். ஜெயலலிதாவுடன் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டுப் பேசுவது சிரிப்பைத்தான் வரவைக்கிறது’’ என்றெல்லாம் பேசி இருந்தார்.

இந்தச் சூழலில், கடந்த 11ம் தேதி மதுரை விமான நிலைய பேருந்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்த, அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன், ‘துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன்’ என அவருக்கு எதிராக கோஷமிட்டு, அதை ஃபேஸ்புக்கில் நேரலையாக பதிவிட்டார். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன், ராஜேஸ்வரனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டதோடு, அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக இருதரப்பு மீதும் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மீது ஏன் இந்த திடீர் தாக்குதல் என அமமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இடைத்தேர்தலில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, கட்சியை முழுமையாகக் கைப்பற்றி விட்டோம் என்ற மிதப்பில் எடப்பாடி இருக்கிறார். முன்னாள் அமைச்சர்களும் அவரிடம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, தனிப்பெரும் தலைவர் போல எடப்பாடியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களிடத்தில் எடப்பாடிக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. இதே நிலை நீடித்தால் 2024, 2026 தேர்தல்களிலும் இரட்டை இலை வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

பொள்ளாச்சி வழக்கு, கோடநாடு வழக்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், சொத்துக்களை பாதுகாக்கவும்தான் எடப்பாடி தலைமை பீடத்தை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல இந்த இயக்கத்தை அவரால் வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை தேர்தல் தோல்விகள் உணர்த்துகின்றன. அவரைத் தொண்டர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் இப்போதிருந்தே அப்பணியைச் செய்வது என்று முடிவெடுத்திருக்கிறோம்" என்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியபோது, “எடப்பாடியை நாங்கள் விமர்சித்துப் பேசுவது இப்போது புதிதாக செய்வது அல்ல. அது கூவத்தூர் துரோகத்திலேயே தொடங்கிவிட்டது. சிவாஜி கணேசனை விட அதிகமாக நடித்து பெர்ஃபார்மன்ஸ் செய்து, சசிகலா காலில் விழுந்து, முட்டிப் போட்டு முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு துரோகம் செய்தார். பின்னர் பா.ஜ.க.வை வைத்து நான்கரை ஆண்டுகள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டார். இப்போது பாஜக தேவையில்லை என்பதால், மற்றவர்களை வைத்து விமர்சிக்க வைக்கிறார். எடப்பாடிக்கு தெரியாமலா அவர்கள் பாஜகவை விமர்சிக்கிறார்கள்? ஆக, பழனிசாமிக்கு எப்போதும் நன்றியுணர்வே இருப்பதில்லை. ‘ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி’ என்கிறார் ஆர்.பி.உதயகுமார். சசிகலா முதல்வராக வேண்டுமென அம்மா சமாதியில் மொட்டை அடித்தவரும் இவர்தான். இப்படி நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்ற கடுமையான விமர்சனத்தை வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com