தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கலின்போது தங்களின் சொத்து மற்றும் கடன்கள் குறித்து அதில் குறிப்பிட வேண்டியது அவசியம். அந்த வகையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அன்றைய முதலமைச்சர் பழனிச்சாமி தனது சொத்துக்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் குறைந்திருப்பாதாகத் என்று தெரிவித்திருந்தார். முன்னதாக, 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு மூன்று கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
அதேபோல், 2016ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியின் அசையும் சொத்து மதிப்பு 3.14 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 4.66 கோடியாகவும் இருந்த நிலையில், 2021ல் அவரது குடும்பத்தின் அசையும் சொத்து மதிப்பு 2.01 கோடியாகவும், அசையா சொத்துக்கள் 4.68 கோடியாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், 2016ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு 33 லட்சமாக இருந்த கடன், 2021ல் அவரது கடன் 29 லட்சத்து 75,000 என்ற அளவில் குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர, 2016ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில், எடப்பாடி பழனிசாமியின் தாய், மகன், மருமகள் பெயரில் இருந்த சொத்துக்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், 2021ம் ஆண்டு செய்த வேட்பு மனுவில் மருமகள், மகன் பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு இடம் பெறவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து, 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியுற்றதைத் தொடர்ந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனிச்சாமி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். இந்த நிலையில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்துவரும் சேலம் சிறப்பு நீதிமன்றம், 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை மறைத்ததாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை விரைந்து விசாரித்து முப்பது நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.