‘தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு சீர்கெட்டு உள்ளது’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

‘தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு சீர்கெட்டு உள்ளது’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரங்கள் குறித்து நான் ஏற்கெனவே இணையதளங்கள் வாயிலாக எனது கருத்து மற்றும் கண்டனங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். ஆனால், இது எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல், மணிப்பூர் மாநில விவகாரம் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்று கூறி இருப்பது, முதல்வரின் ஆட்சி முறை எப்படி உள்ளது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மணிப்பூர் கலவரம் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். மணிப்பூர் கலவரம் துவங்கிய உடனேயே அதனைக் கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் 8.5.2023 நாளிட்ட அறிக்கை மூலம் திமுக அரசின் முதலமைச்சருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன். அதுமட்டுமின்றி, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம் குறித்து நான், எனது கடுமையான கண்டனத்தை 21.7.2023 அன்றே தெரிவித்து இருக்கிறேன்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் இணையதளப் பதிவுகளைக்கூட தனது கீழ் இயங்கும் காவல் துறை மூலம் தெரிந்துகொள்ளாத முதல்வர், மணிப்பூர் சம்பவம் பற்றி நான் எதுவும் பேசவில்லை என்று, தனது நிதியமைச்சர் மூலம் 22.7.2023 அன்று பேட்டி அளிக்க வைத்ததும், பிறகு 26.7.2023 அன்று பகிரங்கமாக திருச்சி பொதுக்கூட்டதில் பேசி இருப்பதும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடைபெறுகிறது என்பதையே தெரிந்துகொள்ளாமல் இருப்பதை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதிலும், பெண்கள் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்ற குறிக்கோளுடன் காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து, சட்டத்தின் ஆட்சியை நடத்தியது அதிமுக அரசு. அதன்படி தமிழகத்தில் 2019ம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 7 ஆக இருந்தது. ஆனால், திமுக அரசின் 2022ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பின்படி நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 58. இதிலிருந்தே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்து இருக்கிறார்கள்.

ஆகவே, இனியாவது சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பற்றத் தன்மை, தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறுவது போன்றவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, விலைவாசியைக் கட்டுப்படுத்தியும், தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்திகிறேன்” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com