அதிமுக கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவகத்தில் எடப்பாடி பழனிசுவாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொது தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம் என கூறப்படுகிறது. அதிமுக பொது தீர்மானங்களை விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை . தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து 10.35 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வாசித்தது. அப்போது ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும். அதிமுக பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்கிறோம். அது போல் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வும் செல்லும் என கூறிய நீதிபதிகள் ஓபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் உள்ளனர்