அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!
Published on

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வான பிறகு முதன்முறையாக நேற்று டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. நேற்று இரவு அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, அண்ணாமலையும் உடன் இருந்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழக பாஜக, அதிமுக இடையேயான பிணக்குகள் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக, நாம் பிரிந்து இருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.

இனி வரும் நாட்களில் கூட்டணியில் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும் என விவாதித்ததாகவும் தெரிகிறது. ஒட்டு மொத்தத்தில் அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக தொடங்கியுள்ளதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பின் போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட தொகுதி பங்கீட்டு குழப்பங்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்தால், தேர்தல் பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும் என பாஜக கூறியதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூடுதலாக தொகுதிகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்த தகவல்களை, டெல்லியில் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி விரிவாக வெளியிடுவார் எனத் தெரிகிறது.

தமிழக பாஜக அதிமுக இடையேயான உரசல் இருந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறிய நிலையில், சேலத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பற்றி தன்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என்றார். அதேநேரத்தில் டெல்லி பாஜக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியிலிருந்து வேட்பாளரை திரும்பப்பெற்றார் எடப்பாடி பழனிசாமி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com