திமுக ஆட்சியில் வரிகள் உயர்த்தப்பட்டதை மக்கள் யாரும் மறந்து விட வேண்டாம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைய உள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் இன்று இறுதி பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் பழனி சாமி அவர்கள் அந்த அறிக்கையில், “இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர் தென்னரசுவை வெற்றி பெறச் செய்யுங்கள். ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு உயர்மட்ட பாலங்கள் கட்டி தீர்வு கண்டது அதிமுக ஆட்சியில் தான். ஏற்கனவே தொகுதிக்கு நன்கு அறிமுகமான உங்களில் ஒருவரான அதிமுக வேட்பாளர் தென்னரசுவை நிறுத்தி உள்ளோம். வீட்டு வரி, கடை வரி, குப்பை வரி, குடிநீர் வரியை திமுக கடுமையாக உயர்த்தியதை மக்கள் மறந்து விட வேண்டாம்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, நம்மை ஏமாற்றி ஓட்டு போட்ட அடிமைகள் என்று நினைத்த, பின்வாசல் வழியே ஆட்சியைப் பிடித்த திமுகவிற்கு நம் எதிர்ப்பைக் காட்ட, இந்த இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு. 1989ல் மதுரை கிழக்கு மருங்காபுரி இடைத்தேர்தலில், ஜெயலலிதாவை அங்கீகரித்து, ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் கருணாநிதிக்கு பாடம் புகட்டியது போல, திமுக ஆட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுத இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.