எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு

எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்  மனு

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளதால், இபிஎஸ், ஒபிஎஸ் ஆகிய இரண்டு அணிகளும் தனித்தனியாக தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இ.பி.எஸ் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது ஒபிஎஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடையீட்டு மனு மீது பிறப்பிக்கப்படும் உத்தரவிற்கும், பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவும் பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும்போது அதிமுகவின் பிரதிநிதி நான் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோர முடியாது. இது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் குறுக்கிடும் நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் , ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் இருந்தாலும் , இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் மனுவில் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை எனவும் பதில் மனு அளிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் மனு இபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com