எடப்பாடி vs அண்ணாமலை - மோதல் முற்றுகிறது, பறிபோகும் இரட்டை இலை சின்னம்!

எடப்பாடி vs அண்ணாமலை - மோதல் முற்றுகிறது, பறிபோகும் இரட்டை இலை சின்னம்!

இடைத்தேர்தலில் எங்களது வேட்பாளரை பா.ஜ.க ஆதரிக்க வேண்டும். ஒருவேளை பா.ஜ.க போட்டியிட்டால், நாங்கள் போட்டியிலிருந்து விலகிவிடுவோம் என்று ஓ.பி.எஸ் வெளிப்படையாக அறிவித்திருந்தார். ஆனால், எடப்பாடி தரப்போ சம்பிரதாயத்திற்கு பா.ஜ.கவின் ஆதரவை கேட்டதோடு சரி. யாருடைய முடிவுக்கும் காத்திருக்காமல் தேர்தல் பணியில் இறங்கிவிட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னரே எடப்பாடி தலைமையிலான அணியில் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள். செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டிய எடப்பாடி அணியினர் மக்களை சந்திக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்ட பேனரில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

கூட்டணி சார்பாக போட்டியிடுவதாக போஸ்டர் அடித்தாலும், அதில் மோடி படம் இல்லை. எடப்பாடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே பிரதானமாக வைக்கப்பட்டிருந்தன. இதுவும் உள்ளூர் பா.ஜ.கவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதன் காரணமாகத்தான் பா.ஜ.க நிர்வாகிகள் அவசரமாக டெல்லிக்கு கிளம்பிச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் ஓ.பி.எஸ் தரப்பும் வேட்பாளரை அறிவித்திருப்பதால் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதில் சர்ச்சை ஏற்படும் என்பதை எடப்பாடி தரப்பு எதிர்பார்த்திருந்தது. ஒருவேளை இரட்டை இலைச்சின்னம் கிடைக்காவிட்டால் இரட்டை புறா, இரட்டை ரோஜா என ஏதாவதொரு சின்னத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரித்துவிட்டால் இரட்டை இலை சின்னம் எப்படியும் கிடைத்துவிடும் என்று எடப்பாடி நினைக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு செய்த இடையீட்டு மனு தாக்கலை விசாரித்து நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்திடமிருந்து சாதகமான பதில் வராத காரணத்தால் எடப்பாடி தரப்பு வருத்தத்தில் இருக்கிறது. எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பு தேர்தல் அலுவலரை கேட்டுக்கொண்டால் நிச்சயம் குழப்பம் வரும். அதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது.

எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் அதுவொரு பின்னடைவாக இருக்கும். ஓ.பி.எஸ் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை. அவர்களைப் பொறுத்தவரை எப்படியாவது எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் செய்துவிட்டாலே வெற்றிதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com