
கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை அடைந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. அதேபோல கர்நாடகா மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்காமல் இருந்தது.
இந்த இரண்டு விவகாரங்களை முன்வைத்து பாஜகவை காங்கிரஸ் தலைவர்கள் மிக கடுமையாக விமர்சித்து வந்தனர். அதே நேரத்தில் இந்த இரு பதவிகளுக்கும் கர்நாடகா பாஜக தலைவர்கள் பலரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால் பாஜக மேலிடம் எந்த முடிவும் எடுக்காமல் தத்தளித்துக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில், தற்போது கர்நாடகா மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திரா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திரா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உடனே பதவி நடைமுறைக்கு வரும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.