‘கல்வியே மிகப்பெரிய ஆயுதம்!’

‘நாளைய இலக்கு’ நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
‘கல்வியே மிகப்பெரிய ஆயுதம்!’

பிளஸ் டூ பயிலும் மாணவ, மாணவியர் எதிர்வரும் பொதுத் தேர்வை பயமின்றி எதிர்கொள்ளவும், அடுத்து உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்தும் கல்வியாளர்கள், துறை வல்லுநர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும், ‘நாளைய இலக்கு’ -2023 நிகழ்ச்சியை ZEE தமிழ் நியூஸ் தொலைக்காட்சி 28.01.2023 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள DMI பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து மாணவ, மாணவியரிடையே சிறப்புரை ஆற்றினார். அவர் அந்த நிகழ்சியில் பேசுகையில், “அரங்கு முழுவதும் நிறைந்திருக்கும் அன்பு மாணவச் செல்வங்களே, சென்ற ஆண்டும ZEE தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய இதுபோன்ற ‘நாளைய இலக்கு’ நிகழ்சியில் கலந்து கொண்டு உங்களிடையே மேற்கல்வியாக சட்டப் படிப்பு படிக்கலாமா? கலை, அறிவியல் படிக்கலமா? மருத்துவம் படிக்கலாமா? என நானும் மற்ற கல்வியாளர்களும் வழிகாட்டினோம்.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கியமாக நான் சொல்ல விரும்புவது, பெற்றோர்களே தயவு செய்து நீங்கள் படித்த கால பெருமையையும் நீங்கள் படிக்க விரும்பி, படிக்க முடியாமல் போன விஷயங்களையும் உங்கள் பிள்ளைகளிடம் திணிக்க முயலாதீர்கள். அதேபோல், மாணவச் செல்வங்களான உங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். உங்கள் கஷ்டங்களை உங்கள் பிள்ளைகளிடம் சொல்லாதீர்கள். ஏனென்றால், அதை அவர்கள் உங்களுடன் இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே, பெற்றோர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ, எந்தத் துறையில் அவர்களுக்குப் படிக்க ஆர்வமோ அந்தப் படிப்பை அவர்கள் படிக்க அனுமதியுங்கள்.

மாணவர்களே, உங்களுக்குத் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இன்றைக்கும் நான் அன்பில் மகேஸ் பொய்யாமொழி MCA என்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். அதுதான் என்றைக்கும் என்னை எனது சொந்தக்காலில் நிற்க வைக்கும் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது. ஆகவே, கல்விதான் ஒருவருக்கு மிகப்பெரிய ஆயுதம். இன்றைக்கும் உலக நாடுகள் பயப்படுவது அணு ஆயுதங்களைப் பார்த்தோ, ராணுவத்தைப் பார்த்தோ அல்ல; நம் நாட்டின் இளைய சக்தியைப் பார்த்துதான். அதை நீங்கள் வீணடித்துவிடக் கூடாது. உங்களது உயர்வு என்பது உங்களது தனிப்பட்ட அல்லது உங்களது குடும்பத்தினுடைய உயர்வு மட்டும் கிடையாது. உங்களது உயர்வு இந்த நாட்டின் உயர்வு. இதைப் புரிந்து கொள்கிற இளைய சமுதாயமாக நீங்கள் வளர வேண்டும்.

ZEE தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திடம் நான் இரண்டு விஷயங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒன்று அடுத்த வருடம் இந்த நிகழ்சியில் மாணவர்களை மட்டும் அழைக்காமல், அவர்களது பெற்றோகளையும் அழைக்க வேண்டும். இரண்டாவது இதுபோன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும். வெறும் செய்திகளை மட்டும் சேகரித்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மட்டும் செய்யாமல், ZEE தமிழ் நியூஸ் தொலைக்காட்சி இதுபோன்ற சமுதாயத்துக்கு பயன் தரும் பணிகளையும் செய்து வருவதை நான் பாராட்டுகிறேன். அவர்களின் இதுபோன்ற பணி மேலும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவச் செல்வங்களே, எதிர்வரும் பொதுத்தேர்வைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் பயப்படாதீர்கள். நேரத்தைக் கணித்து தேர்வை எதிர்கொண்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி, செல்போன் போன்ற ஏராளமான பொழுதுபோக்குகள் வந்துவிட்ட நிலையில் அதையும் தாண்டி கல்வியிலும் தேர்விலும் முதன்மை பெற்று விளங்கும் உங்களைக் கண்டு நான் தலை வணங்குகிறேன்” என்று பேசினார்.

முன்னதாக, காவல் துறை உயர் அதிகாரி அரவிந்தன் ஐ.பி.எஸ். மாணவர்கள் பொதுத் தேர்வை எளிதாக எப்படி அணுகுவது என்பதை குறித்துப் பேசினார். மேலும், பல கல்வியாளர்களும் துறை வல்லுநர்களும் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com