முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்!

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்!

திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் வருகிற பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலய மாநிலங்களில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திரிபுரா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய ஆயுத துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொடி அணி வகுப்பும் நடைபெற உள்ளது.

தேர்தல் நியாயமாகவும், அமைதியான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வீடுகளிலிருந்தே வாக்குச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதி 80 வயதான முதியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

தேர்தல் நடைபெற உள்ளதால் சட்டவிரோதமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் கொண்டு செல்வது, ஆயுதங்கள் எடுத்துச் செல்வது மற்றும் போதைப் பொருள்களை எடுத்துச் செல்வது இவற்றை தடுக்கும் விதமாக 14 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப் 16 ஆம் தேதி நடைபெறும் என்றாலும் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதிதான் வெளியிடப்படும். மேலும் தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நடத்தை விதிகளும் உடனுக்குடன் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

திரிபுராவில் 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நாகாலாந்து மற்றும் மேகாலயத்திற்கும் இந்த சலுகை பொருந்தும் எனத் தெரிகிறது.

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்கும் என்று முதல்வர் மாணிக் சஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயம் மாநிலங்களில் மொத்தம் 62.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 31.47 லட்சம் வாக்காளர்கள் பெண்களாவர். 80 வயதுக்கு மேலான வாக்காளர்கள் 97,000 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 31,700 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com