வன்முறைக்கு ஆளாகும் முதியவர்கள்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

வன்முறைக்கு ஆளாகும் முதியவர்கள்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் உள்ள வயதான பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்(50%) வேலை செய்யவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களில் பாதி பேர் படிக்காதவர்கள் என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா ஏனும் அரசு சாராத தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை.

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் நிலை குறித்த ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பு சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவில்,

கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (54 சதவீதம்) திருமணமானவர்கள், மீதமுள்ளவர்கள் விதவைகள் எனத் தெரிய வந்தது.

இந்த பெண்களில் ஐம்பத்திரண்டு சதவீதம் பேர் முதியோர் துஷ்பிரயோகத்தை ஒப்புக்கொண்டனர், அவர்களில் 16 சதவீதம் பேர் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். குடும்ப அமைப்பில் இதை மோசமாக நடத்தப்படுதலின் முதல் வடிவம் எனக் கொண்டால், இவர்களுக்கு நடக்கும் அவமரியாதை மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை மோசமாக நடத்தப்படுவதின் இரண்டாவது பொதுவான வடிவமாகும்.

ஹெல்ப் ஏஜ் இந்தியா ‘Women and Ageing: Invisible or Empowered’ எனும் தலைப்பில் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட 20 மாநிலங்களில் 7,500 வயதான பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தியது.

டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உட்பட ஐந்து பெருநகரங்களில் வாழும் பெண்களில் பலர் அதாவது இந்த சர்வேயில் கலந்து கொண்டு பதிலளித்தவர்களில் பெரும்பாலான பெண்கள் தாங்கள் விதவைகள் என்பதால் பாகுபாடு காட்டப்படுவதாக உணர்ந்தனர். அவர்களில் கணிசமானோர் தங்களுக்கான முக்கியமான முடிவுகளுக்கு குடும்பத்தின் மற்றவர்களைச் சார்ந்திருப்பதாகக் கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

வயதான பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. அவர்களில் பாதி பேர் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இருந்த போதும் அவர்களில் 64 சதவீதம் பேருக்கு காப்பீடு இல்லை.

ஆய்வின் அடிப்படையில் பார்க்கையில், “2015 மற்றும் 2030 க்கு இடையில், உலகின் முதியோர் எண்ணிக்கை (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) சுமார் 56 சதவீதம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வருங்காலத்தில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 1.4 பில்லியனை எட்டும், இதனால் உலக மக்கள்தொகையில் அவர்களது எண்ணிக்கை கிட்டத்தட்ட 17 சதவீதமாக மாறும்.

அத்துடன் இந்த டிஜிட்டல் யுகத்தில், 24 சதவீத எண்ணிக்கையிலான வயதான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆராய்கையில்; வயதான பெண்களின் நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகள் உனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்ப அடிப்படையிலான சுகாதார தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

அதுமட்டுமல்ல வயதான பெண்களுக்கு எதிராக குடும்பத்தில் நேரக்கூடிய துஷ்பிரயோகத்தை ஒரு விரிவான பிரச்சாரத்தின் மூலம் தீர்க்க முடியும் என்றும் அது கூறியது.

“பெண்கள் வயதாகும்போது, புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் கண்டுகொள்ளப்படாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 2021ல் மொத்த பெண்களில் 11 சதவீதமாக இருந்தனர், இந்த எண்ணிக்கை 2031ல் 14 சதவீதமாக மாறக்கூடும் (72 கோடியில் 10 கோடி),” என்று ஹெல்ப் ஏஜ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் பிரசாத் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com