மலேசியாவில் புதிதாக தேர்தல் நடத்த வழிவகை செய்யும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப் பட்டுள்ளது.
மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி (யுஎம்என்ஓ) தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அந்த கூட்டணி கட்சிகளுக்கு இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த ஆண்டு இஸ்மாயில் சப்ரி யாகூப் பிரதமராக பதவி ஏற்றார். இந்நிலையில், பிரதமர் இஸ்மாயில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:
மலேசியாவில் தேர்தல் நடத்தி மக்கள் புதிய ஆட்சியைத் தேர்வு செய்ய உதவும் வகையில் தற்போதைய நாடாளுமன்றத்தை கலைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேர்தலின் மூலமாக இந்நாட்டில் நிலையான மற்றும் உறுதியான அரசு அமைவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பளிக்கப் பட வேண்டும். மக்கள் தீர்ப்பு மகத்தான சக்தி உடையது.
--இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான தேதி குறித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.