வாக்குச்சாவடிக்கு வர வேண்டாம்.. தேர்தல் ஆணையமே உங்கள் வீடு தேடி வரும்! தபால் ஓட்டுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

postal ballots
postal ballots image source:onindia
Published on

ஓட்டு என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எவ்வித பாகுபாடும் இல்லாத ஒரே உரிமை இது மட்டுமே என்பதால் தங்கள் பகுதியில் அரசியல் பணி செய்வோரை ஓட்டு மூலம் தாங்களே தேர்ந்தெடுக்க அனைவரும் விரும்புவார்கள்.

ஆனால் தேர்தல் நடைபெறும் காலம் கோடைகாம் என்பதால் வயது முதிர்ந்தவர்கள் ஓட்டு போட வெளியே வருவதை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்படும் . அதேபோல் நோயாளிகள் , அவசர பணிகளில் இருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரும் வாக்கு சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாது.

இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்த பட்ட முறைதான் வீட்டில் இருந்து ஓட்டு போடும் வசதி கொண்ட தபால் ஓட்டு (Postal Ballot). எந்த “ஒரு வாக்காளரும் வாக்கு இழக்கக் கூடாது” என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வசதி தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விரைவில் வரப்போகும் 2026 தேர்தலுக்கான தபால் ஓட்டு (Postal Ballot) விண்ணப்பப் படிவங்கள் (Form-12D) இன்று முதல் விநியோகம் துவங்கியுள்ளது. யாரெல்லாம் இந்த தபால் ஓட்டு முறையில் வாக்களிக்கலாம் என்பதில் சில விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் நெறிப்படுத்தி உள்ளது.

அதன்படி 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 40% மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் (Persons with Disability), அவசிய பணியில் இருப்பவர்கள்( Essential services) , நோய் பாதிப்புகளுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோருடன் ஊடகப் பணியாளர்கள், தேர்தல் பணியாளர்களும் வாக்குச்சாவடிக்கு வர முடியாததால் இவர்களுக்கும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

தபால் ஓட்டு விண்ணப்பம் விண்ணப்பிக்கும் முறை இதுதான்..

தேவைப்படுவோருக்கு Form-12D என்ற விண்ணப்பம் அதிகாரிகள் மூலம் வழங்கப்படும்.

தேர்தல் அறிவிப்பு வந்த 5 நாட்களுக்குள் பெயர், வாக்காளர் எண் (EPIC number), முகவரி, ஏன் booth வர முடியாது என்பதற்கான காரணம் ஆகிய விபரங்களை பூர்த்தி செய்து வாக்காளர் அட்டை , மாற்றுத்திறனாளி என்றால் சான்றிதழ் போன்ற தேவையான அடையாள ஆவணங்கள் தகுந்த ஆதாரங்களுடன் கொடுக்க வேண்டும். அதை பரிசீலிக்கும் தொகுதி தேர்தல் அலுவலர் (Returning Officer ) ஒப்புதல் கிடைத்தால் அதிகாரிகள் விண்ணப்பித்தவர் வீட்டுக்கு நேரில் வந்து தபால் வாக்குச் சீட்டு தருவார்கள். அத்துடன் வீட்டிலேயே வாக்குப்பதிவு செய்யவும் உதவுவார்கள்.

வீட்டிலேயே வாக்களிக்கும் அனுமதி கிடைத்தால் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து வாக்கு சீட்டு(Ballot paper) தருவார்கள். மேலும் தேர்தல் ஆணையம் (Election Commission of India) விதிமுறைகள் படி ரகசியமாக ஓட்டு போட வசதி ஏற்படுத்தி தருவார்கள்.

85 வயதிற்கு குறைவானவர்கள் , மாற்றுத்திறனாளி சான்று இல்லாதவர்கள், சாதாரணமாக booth வர முடியும் வாக்காளர்கள், Form-12D தாமதமாக தந்தவர்கள், தவறான தகவல் கொடுத்தவர்கள், வாக்காளர் அட்டை (EPIC) இல்லாமல் விண்ணப்பிப்பவர்கள் ஆகியோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஓட்டு வசதியில் வராத கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் வரிசையில் நிற்காமல் முன்னுரிமை தரப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அங்கே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற தகவல் மகிழ்ச்சி தருவதாக உள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தரும் இந்த வசதிகளை பயன்படுத்தி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com