
தமிழ்நாட்டில் விரைவில் மின்சார பஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாளர்கள் ஓய்வெடுக்க ஏசி வசதியுடன் கூடிய புதிய ஓய்வு அறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியது, போக்குவரத்து துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு வருகிறது. நீண்ட நாளாக நிலுவையில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பிரச்சனை விரைவில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்ற தொழிலாளர் டி.ஏ குறித்த வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது விரைவில் அதுவும் முடிக்கப்படும்.
மேலும் சென்னை மாநகர பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலம் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷினை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது போக்குவரத்து துறையில் பல்வேறு புது புது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜெர்மனி வங்கி நிதி உதவியோடு 500 மின்சார பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மேலும் இதற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
மேலும் பெண்களுக்கு கட்டணம் மற்ற பேருந்து பயணத்திற்கு 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து துறை நலிவடைய வாய்ப்பில்லை.
மேலும் 100 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வழித்தடங்களின் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 1400 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இது மட்டுமல்லாது 2000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார் என்று கூறினார்.